

கழுதை வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. கழுதை வளர்க்க ரூ.50 லட்சமா? வாங்க விரிவாக பார்க்கலாம்...
நம் ஊர் பக்கங்களில், ‘கழுதை கெட்டால் குட்டி சுவர்’, ‘நீ எல்லாம் கழுதை மேய்ப்பதற்கு தான் லாயக்கு’ என்று உருப்படாமல் இருக்கும் ஒருவரை திட்டுவதற்கு கழுதையை ஒப்பிட்டு கூறும் மிகவும் பிரபலமான பழமொழியை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் தற்போது கழுதை மேய்ப்பது சிறந்த தொழிலாக மாறி இருக்கிறது. கழுதை வளர்க்க லட்சக்கணக்கில் மானியம் தருவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ், கால்நடை தொழில்களை தொடங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக அழிந்து வரும் நாட்டு இன கழுதைகளை பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், 50 சதவீதம் மானியம், வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கால்நடை பண்ணைகளை அமைக்கத் தேவையான மொத்த மூலதனத்தில், 50 சதவிகிதத்தை மத்திய அரசே மானியமாக அளிக்கும். இது அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இந்தியாவில் வேகமாக சரிந்து வரும் கழுதைகளின் எண்ணிக்கையை பெருக்குவதே இதன் நோக்கம். 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் கழுதைகள் மட்டுமே உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 60 சதவீதம் குறைவு என்கிறது புள்ளி விவரங்கள். கடந்த காலங்களில் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கழுதைகளின் தேவை தற்போது குறைந்துவிட்டதால் அதன் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாகவும், அதனை அதிகரிக்கவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நாட்டு கழுதை இனங்களை பாதுகாக்கவும், தொழில்முனைவோர்களும், விவசாயிகளும் கழுதைப் பண்ணை உள்ளிட்ட கால்நடைப் பண்ணைகள் அமைத்து லாபகரமான தொழிலாக மாற்றவும், அவர்களின் வாழ்வாதாரத்தை வளமாக்கவும், வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும் தேசிய கால்நடை இயக்கம் மூலம் நிதி ஆதரவை அளித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கழுதை பாலுக்கு அதிகளவில் கிராக்கி இருப்பது மற்றும் இனப்பெருக்க விற்பனை மூலம் வருமானத்தை உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் கழுதைகள் மட்டுமல்லாமல் குதிரைகள், ஒட்டகங்கள் போன்றவைகளை இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளை அமைக்க தனிநபர்கள் மற்றும் விவசாயக்குழுக்கள் 50 லட்சம் வரை மூலதன மானியத்தை பெறலாம். இது இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
முதல் தவணை வங்கியானது கடனை அங்கீகரித்த பின்னரும் இரண்டாம் தவணை பண்ணை கட்டி முடிக்கப்பட்டு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகும் வழங்கப்படும்.
கழுதை பண்ணை வைக்க ஆர்வம் இருப்பவர்கள் குறைந்தது 50 நாட்டு இனத்தைச் சேர்ந்த பெண் கழுதைகள் மற்றும் 5 ஆண் கழுதைகளை வைத்திருக்க வேண்டியது கட்டாயம். இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கழுதைகள் இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்க மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி அல்லது அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தனிநபர்கள், சுயஉதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுதை பால் அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்கான 1 லிட்டர் சுமார் ரூ.5000 விற்கப்படுகின்றன. எனவே கழுதைப் பால் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்.
நீங்கள் ஒரு தரிசு நிலம் வைத்திருக்கும் பட்சத்தில் அதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்பதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்தி அதிகளவில் லாபம் சம்பாதிக்க முடியும்.
ஏற்கனவே குஜராத்தில் கழுதை பால் விற்பனை மூலம் இளைஞர் ஒருவர் மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு,
பான் கார்டு,
புகைப்படம்,
நில ஆவணங்கள் (சொந்த நிலம் அல்லது குத்தகை ஒப்பந்தம்)
வங்கி கணக்கு விவரங்கள்
ஆறு மாத வங்கி அறிக்கை
ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் கழுதை வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் மத்திய அரசின் https://nlm.udyamimitra.in/ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
கழுதை வளர்ப்புக்கு ரூ.50 லட்சம் தரும் அரசின் இந்த அசத்தலான அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.