வாக்காளர்களுக்கு கிரைண்டர்! தேங்காய் மீது சத்தியம் வாங்கும் எம்.எல்.ஏ.

வாக்காளர்களுக்கு கிரைண்டர்!
தேங்காய் மீது சத்தியம் வாங்கும் எம்.எல்.ஏ.
Published on

ர்நாடக மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு அம்மாநில அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வேலை செய்யத் துவங்கி விட்டன. கர்நாடக மாநிலத்தில் உள்ளது பெல்காம். இது இப்போது, ‘பெலகாவி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டமன்றத் தொகுதிகளில், ‘பெலகாவி-ரூரல்’ தொகுதியும் ஒன்று.

இந்த சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் இருக்கிறார். இவர்தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும், இந்தத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறார் என்பதை அவர் உறுதி செய்து கொண்டுவிட்டார். அதைத் தொடர்ந்து, அவரும் அவரது கட்சித் தொண்டர்களும் தேர்தல் களத்தில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதுதான் தற்போது பெலகாவியில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயமாகி விட்டது.

இவர் செய்யும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் விநோதமாக உள்ளது. இவரது நம்பிக்கைக்குரிய ஆட்கள் கையில் தேங்காய் சகிதமாக ஒவ்வொரு வீடாகச் செல்கிறார்கள். வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவர் அல்லது தலைவியிடம், ‘உங்கள் ஆதரவு யாருக்கு?’ என்று கேட்கிறார்கள். அவர்கள், ‘காங்கிரஸ் கட்சிக்குத்தான்’ என்று சொன்னால், அவர்கள் முன்பு தேங்காயை நீட்டி, ‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களிப்போம்’ என்று தேங்காய் மீது அடித்து சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சத்தியம் செய்தவுடன், அவர்களிடம் ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனை அவர்கள் சொல்லும் இடத்தில் கொடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும், வருங்கால காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சார்பாகவும் ஒரு கிரைண்டரைப் பெற்றுக் கொள்ளலாம்.

பெலகாவி ரூரல் தொகுதி மக்கள் மத்தியில், குறிப்பாக பெண் வாக்காளர்கள் மத்தியில் இந்த அன்புப் பரிசு அப்ரோச் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி, பல பெண்கள், கடந்த தேர்தலின்போது லட்சுமி ஹெப்பால்கர் டோக்கன் வினியோகம் செய்து, தனது அன்புப் பரிசாக பிரஷர் குக்கர் கொடுத்ததையும் நினைவு கூறுகிறார்களாம்.

நம்மூரில் கூட வடசென்னை தொகுதி ஒன்றில் இடைத் தேர்தல் நடைபெற்றபோது, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் குக்கர் அன்புப் பரிசு கொடுத்ததுடன், இருபது ரூபாய் நோட்டையும் டோக்கனாகக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது உங்கள் நினைவுக்கு வருகிறதுதானே!?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com