
பாலிசிதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அனைத்து தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்க சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கடந்த புதன்கிழமை(3-ம்தேதி) முடிவு செய்தது. திருத்தப்பட்ட வரிகள் விகிதங்கள் வரும் செப்டம்பர் 22-ம்தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தில் நடந்த சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இந்த அதிரடி வரிக்குறைப்பு இந்திய மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் 4 அடுக்காக இருந்த ஜிஎஸ்டி 2 அடுக்காக குறைக்கப்பட்டு தற்போது வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் புதிததாக புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
இதன் மூலம் நடுத்தர மக்கள் மற்றும் முதியோர் பயன்பெறும் வகையில் காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்து, அனைத்து தரப்பு மக்களும் மருத்துவ காப்பீடுகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தற்போது, காப்பீட்டு சேவைகள் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தற்போது அறிவித்துள்ள மாற்றத்தின் மூலம், அனைத்து தனிநபர் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளும், காலக்காப்பீட்டு பாலிசிகள், யூனிட் லிங்க்டு காப்பீட்டுத் திட்டம் (ULIPகள்) மற்றும் எண்டோவ்மென்ட் திட்டங்கள், பேமிலி ஃப்ளோட்டர் பாலிசிகள், மூத்த குடிமக்களுக்கான பாலிசிகள் உள்ளிட்டவை இப்போது பூஜ்ஜிய ஜிஎஸ்டி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மறுகாப்பீடுடன் சேர்த்து, மூத்த குடிமக்கள் திட்டங்கள் உட்பட அனைத்து தனிநபர் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளுக்கும் இந்த விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழு வரி விலக்கால் காப்பீடுகளின் பிரீமியம் தொகை சுமாா் 15 சதவீதம் குறையும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் மத்திய அரசு ரூ.16,398 கோடி ஜிஎஸ்டியைப் பெற்றிருந்த நிலையில், ரூ.8,135 கோடி ஆயுள் காப்பீடு மூலமும், ரூ. 8,263 கோடி மருத்துவ காப்பீடு மூலமும் அரசு பெற்றிருந்தது.
அதற்கு முன் ‘என்டோவ்மென்ட்' எனப்படும் ஆயுள்காப்பீட்டுக்கு முதலாம் ஆண்டு 4.5 சதவீதமும், அடுத்த ஆண்டில் இருந்து 2.25 சதவீதமும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டது. இதுதவிர ‘யூலிப்' எனப்படும் மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கும், மருத்துவ காப்பீட்டுக்கும் 18 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. இதனால், சந்தாதாரர்கள் ஒவ்வொரு பிரிமீயத்தின் போதும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அதாவது, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மருத்துவ காப்பீடு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் சேர்த்து ரூ.450 கூடுதலாக செலுத்தும் நிலை இருந்தது. எந்தவித வருமானமும் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இந்த வரி விதிப்பு மிகுந்த சிரமத்தை கொடுத்து வந்தது.
இதுபோன்ற பல்வேறு காரணிகள், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. உடல்நலம் தொடர்பான காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிக்கப்பட்டதற்கு ஆரம்பம் முதலே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது ஜி.எஸ்.டி. வரி விலக்கால் சாமானிய மக்களின் பணச்சுமை குறைத்துள்ளது.
இந்த நடவடிக்கையால் சாமானிய மக்களுக்கு காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் வழங்க முடியும் என்றும், இதனால் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு செய்பவர்களின் எண்ணிக்கை இனிவரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என்றும், இது முழுவதும் காப்பீட்டை விரிவுபடுத்த உதவும் என்றும் சீதாராமன் கூறினார்.