
சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதனையடுத்து, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன் தங்களது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்தது.
இதனை தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதி மந்திரிகளும் பங்கேற்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் எந்தெந்த பொருட்களுக்கு வரிகுறைப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், 4 அடுக்குகளில் இருந்த ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த சமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும் தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம் பான் மசாலா, குட்கா, சிகரெட், பீடி, புகையிலை, ஆடம்பரமான கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதுது. அதேபோல் சர்க்கரை மற்றும் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களுக்கான வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது சாமானிய மக்களின் வாழ்வில் தினசரி பயன்படுத்தும் பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களின் செலவு குறையும் வாழ்வாதாரம் உயரும்.
பென்சில், ஷார்பபென்னர்ஸ், கிரையான்ஸ், பயிற்சி புத்தகம், நோட் புத்தகம், ரப்பர் (Erasers) உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தினசரி வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் எண்ணெய், ஷாம்பு, டூத்பேஸ்ட், சோப்பு, டூத்பிரஷ், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், பால் டப்பாக்கம், குழந்தைகளுக்கான நாப்கின்கள், Diapers, தையல் மெஷின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மெடிக்கல் கிரேட் ஆக்சிஜன், அனைத்து மருத்துவ சிகிச்சை உபகரணங்கள், குளுக்கோமீட்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏசி, டிவி, மானிட்டர், புரோஜெக்டர்ஸ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருள்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.