
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தில் நடந்த பல அதிரடி திருப்பங்கள் 2 நாட்களாக சாமானிய மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து, 4 அடுக்காக இருந்த ஜிஎஸ்டி 2 அடுக்காக குறைக்கப்பட்டு வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது 12 சதவீத வரி அடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரி அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி அடுக்குக்கும் மாற்றப்பட உள்ளன.
அதேநேரம் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு 140 கோடி குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த மாற்றம் மூலம்
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மீதான பாரம் குறையும். இதனால் பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், இதன் காரணமாக பொதுமக்களின் பணபுழக்கம் அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இதனால் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, இந்திய பொருளாதாரம் வளரும்.
மத்திய அரசு ஜிஎஸ்டிவரியை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் அந்த மக்களால் இதுவரை எந்த பொருட்களையும் வாங்க முடியாத நிலை இருந்து வந்தது. ஜிஎஸ்டி குறைப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் பயன்பெறுவார்கள்.
சாமானியர்கள் பயன்படுத்தும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி சிமெண்டு உள்ளிட்ட வீட்டு கட்டுமானப்பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிதிப்பிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
சிமெண்டு உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளதால் சிமெண்டு உள்பட ஏராளமான கட்டுமான பொருட்களின் விலை குறைய உள்ளது. சிமெண்ட் மீதான வரிகுறைப்பு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும். வீடு கட்டுபவர்களுக்கு கட்டுமானச் செலவில் சிமெண்ட் முக்கிய பகுதியாக இருப்பதால், ஜிஎஸ்டி குறைப்பு என்பது வீடு கட்டுவது மற்றும் வணிகத் திட்டங்களின் செலவைக் குறைக்கும்.
இது மட்டுமல்லாமல், மார்பில் மற்றும் பளிங்கு கற்கள் (டிராவர்டைன்),மணல்-சுண்ணாம்பு, செங்கற்கள் மற்றும் கல் பதிக்கும் வேலை, கிரானைட் கற்கள் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆகவும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பொருட்கள் மீதான வரி குறைப்பு வீடு கட்டி முடிந்தவுடன் செய்யப்படும் வீட்டின் உள்கட்டமைப்பு பொருட்களின் விலை பெருமளவு குறையும் என்பதால் வீடு கட்டுவதற்கு போட்ட பட்ஜெட் கணிசமாக குறையும்.
ஆனால் அதேசமயம் வீட்டு உள்ள அலங்காரங்களை ஆடம்பரமாக செய்யும் போது அதற்கான பொருட்கள்களுக்கு 40 சதவீதம் அதிக வரி விதிக்கப்படும் என்பதை மறக்கக்கூடாது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு இனி நிஜமாகும் எனதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப்பொருட்கள் மற்றும் சிமெண்டு விலை குறையும் போது கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சி அடையும்.
ஆனால் இந்த விலை குறைப்பு நேரடியாக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் அதை மத்திய அரசு கவனிக்க வேண்டும். அதாவது வரியை உயர்த்தும்போது விலையை ஏற்றும் நிறுவனங்கள், வரி குறைக்கப்பட்டுள்ள இந்த சூழலில் விலையை குறைக்கிறதா? என்பதை கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என்றும் மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.