

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித வாழ்க்கையை எளிமையாக்கியுள்ள அதே வேளையில், குடும்பங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையையும், நிம்மதியையும் அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது. குஜராத்தில் தன் மகள் எப்போதும் செல்போன் பார்க்கிறாள் என்பதற்காக, அவளைக் கண்காணிக்க ஒரு தந்தை ஐந்து தனியார் துப்பறியும் நிபுணர்களை நியமித்த செய்தி கடந்த காலங்களில் வெளியாகி உலகத்தையே உலுக்கியது. 2017-18ல் குஜராத்தின் ஒருசில கோடீஸ்வரக் குடும்பங்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிய இந்தச் சம்பவம், 2026-ம் ஆண்டிலும் தொடர்கிறது. குஜராத்தின் பெருநகரங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத பெரும் டிரெண்டாகவே உருவெடுத்திருக்கிறது.
அகமதாபாத், சூரத், வதோதரா போன்ற தொழில் நகரங்களில் வசிக்கும் மேல்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்களின் பதின்பருவப் பிள்ளைகளைக் கண்காணிப்பதற்காகத் தனியார் துப்பறியும் நிபுணர்களை நாடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்களில் எப்போதும் மூழ்கியிருக்கும் பிள்ளைகள், தங்களுக்குத் தெரியாமல் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழக்கிறார்களா, கிரிப்டோ வர்த்தகம் போன்ற ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுகிறார்களா என்ற பயமும், அல்லது போதைப்பொருள் பழக்கம் உள்ள தவறான நட்பு வட்டாரங்களில் சிக்குகிறார்களா என்ற அதீத பயமே பெற்றோர்களை இத்தகைய முடிவுக்கு தள்ளுகிறது.
குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பிள்ளையிடம் மொபைல் போன் பயன்பாடு பல மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக, ஆரம்பத்தில் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த இந்த துப்பறியும் கலாச்சாரம், தற்போது நடுத்தர குடும்பங்களுக்கும் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கூட இதற்காக செலவிட துணிகிறார்கள்.
கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் வெளியான முன்னணி ஊடகங்களின் புலனாய்வு அறிக்கைகளின்படி, குஜராத்தின் பாரம்பரிய திருவிழாவான நவராத்திரி நடனக் காலங்களிலும், காதலர் தினத்தை ஒட்டிய நாட்களிலும் இந்தத் துப்பறியும் நிபுணர்களுக்கான தேவை உச்சத்தைத் தொட்டது. இந்தச் சிறப்பு நாட்களில், பிள்ளைகள் தங்களை மீறித் தவறான பாதைகளில் சென்றுவிட கூடாது என்பதற்காக பெற்றோர்கள் போட்டிப் போட்டு கொண்டு துப்பறியும் நிறுவனங்களில் ஏராளமாக பணம் கட்டி முன்பதிவு செய்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை வசூலிக்கும் இந்த நிறுவனங்கள், பண்டிகைக் காலங்களில் ஒரு நாளுக்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. ஆனாலும், பிள்ளைகளின் பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக கருதி பெற்றோர்கள் லட்சக்கணக்கில் செலவிடத் தயங்குவதில்லை.
இந்த கண்காணிப்பு முறை, தற்போது இன்னும் நவீனமடைந்து டிஜிட்டல் வடிவத்தை எடுத்துள்ளது. பிள்ளைகளுக்கு தெரியாமல் அவர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரகசியமாக 'ஜி.பி.எஸ் டிராக்கர்' கருவிகளை பொருத்துவது, பிள்ளைகளின் மொபைல் போன்களில் உளவுச் செயலிகளைப் (Spyware) புகுத்துவது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்துவது எனப் பெற்றோர்களின் துப்பறியும் படலம் தீவிரமடைந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள முன்னணித் துப்பறியும் நிறுவனங்களுக்கு வரும் மொத்த அழைப்புகளில், கிட்டத்தட்ட 30% முதல் 40% வரை 'பிள்ளைகள் கண்காணிப்பு' கோரிக்கைகள் தான். இது ஒருபுறம் பெற்றோரின் இயலாமையையும் பயத்தையும் காட்டினாலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"பிள்ளைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்களின் தனிமனித சுதந்திரத்தையும், தனியுரிமையையும் பெற்றோர்களே பறிப்பது ஆரோக்கியமானதல்ல" என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த துப்பறியும் விவகாரம் பிள்ளைகளுக்கு தெரியவரும்போது, அவர்கள் பெற்றோர்கள் மீதும் குடும்ப அமைப்பின் மீதும் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையையும் முற்றிலும் இழந்துவிடுகிறார்கள். இது அவர்களை இன்னும் தீவிரமான மன அழுத்தத்திற்கும், குடும்பத்தை விட்டு விலகி செல்லும் எண்ணத்திற்கும் தள்ளிவிடுகிறது. பிள்ளைகளுடன் ஆரோக்கியமான முறையில் மனம் திறந்து பேசுவதும், அவர்கள் மீது உண்மையான அன்பை செலுத்தி நம்பிக்கையான சூழலை உருவாக்குவதுமே இவற்றுக்கான நிரந்தர தீர்வாகும்.