
குஜராத் மாநிலத்தில், சுவாசத்தை பாதிக்கும் நச்சுத்துகள்களை வெளியிடும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் என்ற நோய் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்ட வெவ்வேறு தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
பல்வேறு வகையான தூசிகளை வெளியிடும் தொழில்களில், தொழிலாளர்கள் பணிபுரியும் போது அவர்களின் சுவாசத்தின் நஞ்சு கலப்பதால் பல விதமான சுவாச நோய்கள் ஏற்படுகிறது. சிலிகோசிஸ் நோய் என்பது சிலிக்கா தூசியை முச்சுக்குழலில் உள்ளிழுப்பதால் ஏற்படுத்தும் கடுமையான உடல்நல அபாயமாகும். இது சிலிகோசிஸ், நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், சிறுநீரக நோய் மற்றும் இருதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. சிலிகோசிஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காசநோய் ஒரு இணை நோயாக ஏற்படுகிறது.
குஜராத்தில், சிலிகோசிஸ் நோய் பல்வேறு தொழில்களில் இருந்து பதிவாகியுள்ளது.
கம்பத் மற்றும் ஜம்புசார் பகுதிகளில் நடைபெறும் அகேட் கல் தொழில்கூடங்கள், கோத்ரா மற்றும் பாலசினோரில் நடைபெறும் குவார்ட்ஸ் தொழில் கூடங்கள், வதோதரா மற்றும் ஆனந்த் பகுதிகளில் உள்ள கண்ணாடி உற்பத்தி ஆலைகள், ராஜ்கோட்டில் உள்ள கண்ணாடி பதிக்கும் கூடங்கள், மாவு ஆலைகள், கவரிங் நகைப்பட்டறைகள், காந்திநகர், அகமதாபாத் மற்றும் சிக்காவில் உள்ள அனல் மின் நிலையங்கள், சுரேந்திர நகரில் உள்ள கல் குவாரிகள், மட்பாண்ட கூடங்கள், திரங்காத்ரா பகுதியில் கல் செதுக்குதல், கிர் சோம்நாத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மற்றும் செங்கல் ஆலைகள் போன்ற தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் நோய் பரவி உள்ளது.
1987 ஆம் ஆண்டில், தேசிய தொழில் சுகாதார நிறுவனம் 470 அகேட் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு தொற்றுநோயியல் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் பணியாளர்களிடம் சிலிகோசிஸின் ஒட்டுமொத்த பாதிப்பு 29.1% ஆகவும் அரைப்பவர்களிடையே 38.2% ஆகவும் இருந்தது. 8.1% நோயாளிகளிடம் பெரிய ஃபைப்ரோஸிஸ் காணப்பட்டது.
(1999–2002) நடத்திய மற்றொரு ஆய்வில், தூசி கலந்த தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு சிலிகோசிஸ் பாதிப்பு 28.9% லிருந்து 36.1% ஆகவும், சிலிகோ-காசநோய் 14.6% லிருந்து 26% ஆகவும், காசநோய் 27% லிருந்து 49.5 % ஆகவும் இருப்பது கண்டறியப்பட்டது. தொழிலில் ஈடுபடாத அண்டை வீட்டார்கள், அப்பகுதி மக்களிடமும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிலிகோசிஸ் பாதிப்பு 5.8 % லிருந்து 13.3 % ஆகவும், சிலிகோ-காசநோய் 2.4% லிருந்து 7.7 % ஆகவும், காசநோய் பாதிப்பு 19.9% லிருந்து 22.6 % ஆகவும் உயர்ந்துள்ளது.
சிலிகோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவரின் இறப்பு குறித்து போதுமான உறுதியான தரவுகள் எதுவும் இல்லை. நம்பகமான தரவு இல்லாதது அதிகாரப்பூர்வ அறிக்கையிடலில் கடுமையான இடைவெளிகளை காட்டுகிறது. தற்போது, அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் உடல்நலத்தைக் கண்காணிக்க எந்த ஒரு அரசுத் துறையும் இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் உடல்நிலையை கண்காணிக்க அரசு புதிய துறையை உருவாக்க வேண்டும் அல்லது பொது சுகாதாரத் துறையின் பொறுப்பில் கண்காணிக்கப்பட வேண்டும்.
சிலிக்கோசிஸ் மற்றும் சிலிக்கோ காசநோய் மட்டுமே தற்போது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன. சிலிக்கா தொடர்பான பிற நோய்களும் கண்டறியப்பட்டு, சான்றளிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு சுவாச நோய்கள் தாக்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பணிபுரிய பாதுகாப்பு கவசங்களும் தரப்பட வேண்டும்.