உலக அளவில் நடத்தப்படும் 72வது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (மே 31, 2025) தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி தொடங்கிய இந்த மாபெரும் நிகழ்வு, பல்வேறு சவால்கள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களுடன் ஒரு மாத காலமாக நடைபெற்று, இன்று அதன் இறுதிபோட்டியை எட்டுகிறது.
சுமார் 108 நாடுகளிலிருந்து வந்த அழகிகள், தலைசிறந்த அழகு, அறிவு, சமூக சேவை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஃபாஸ்ட்-ட்ராக் சவால்கள், டேலண்ட் போட்டி, ஹெட்-டு-ஹெட் சவால் மற்றும் பியூட்டி வித் எ பர்பஸ் (Beauty with a Purpose) போன்ற பிரிவுகளில் தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர். இந்த சவால்களில் சிறந்து விளங்கியவர்கள் ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு, இந்தியாவின் சார்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 பட்டத்தை வென்றவர். இந்திய மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் நந்தினி குப்தா வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இறுதிப் போட்டியில், நடப்பு உலக அழகி செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஷ்கோவா, தனது வாரிசுக்கு மகுடம் சூட்டுவார். இந்த கண்கவர் நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தேசிய தொலைக்காட்சிகள் மூலமாகவும், அதிகாரப்பூர்வ Miss World pay-per-view தளமான www.watchmissworld.com மூலமாகவும், இந்தியாவில் SonyLIV மூலமாகவும் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. யார் இந்த மதிப்புமிக்க உலக அழகிப் பட்டத்தை வென்று, உலகளாவிய அடையாளத்தைப் பெறுவார் என்பதை அறிய உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.