

புது டெல்லியில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகனின் வீட்டில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்த விழாவில் பல மத்திய அமைச்சர்கள் , பாஜக பிரமுகர்கள் , தமிழ்நாட்டில் இருந்து பராசக்தி படத்தில் நடித்த நடிகர்களான ரவி மோகன் ,சிவகார்த்திகேயன் , அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நரேந்திர மோடி பசுக்களுக்கு பொங்கலை ஊட்டி மகிழ்ந்தார். பொங்கல் பண்டிகை உணவு வழங்கும் விவசாயிகளின் கடின உழைப்பிற்கும் , இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு உலகளாவிய பண்டிகையாக இருக்கிறது, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பொங்கல் குறித்து சில தகவல்களை மேடையில் பேசினார். நமது நாட்டு விவசாயிகள் இந்த தேசத்தை கட்டி எழுப்புவதில் முக்கியமான பங்காளிகளாக இருக்கின்றனர். விவசாயிகளின் முயற்சிகள், 'ஆத்மநிர்பர் பாரத்' பிரச்சாரத்தை பெரிதும் வலுப்படுத்துகின்றன. நமது மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகாரங்களை அளிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த பூமி நமக்கு ஏராளமான வளங்களை அளித்திருக்கும் போது அதை பாதுகாப்பதும் , அதை அடுத்த தலைமுறைகள் அனுபவிக்க பத்திரமாக வைத்திருப்பதும் , தண்ணீரை சேமிப்பதும் மற்ற வளங்களை வைத்திருப்பதும் , நமது கடமைகளாக இருக்கிறது என்று கூறினார்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களும் , தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்களும் பொங்கல் பண்டிகையை போற்றி கொண்டாடுகின்றனர். அந்த கொண்டாட்டத்தில் தான் பங்கு பெறுவது பெருமையாக இருக்கிறது. உலகின் பழமையான வாழும் நாகரிகங்களில் தமிழ் நாகரீகமும் ஒன்று , பல நூற்றாண்டுகளின் பாரம்பரியங்களும் அறிவும் நம்மை எதிர்காலத்திற்கு வழிநடத்துகிறது.
இந்த மரபால் ஈர்க்கப்பட்டு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது, இயற்கை , குடும்பம் , சமூகம் ஆகியவற்றின் சமநிலையை பாதுகாப்பதில் பொங்கல் பண்டிகை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் இயற்கை விவசாயங்களில் பங்களிப்பு செய்வது அதிகரித்து வருகிறது , என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு தனித்தனியாக பொங்கல் வாழ்த்துகளையும் , மற்ற மாநிலங்களுக்கு மகர சங்கராந்தி வாழ்த்துக்களையும் , உத்திராயண வாழ்த்துக்களையும் தனது X பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த பொங்கல் நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், அண்ணாமலை , பொன்.ராதாகிருஷ்ணன் , நடிகை மீனா , கலா மாஸ்டர் ஆகியோரும் , பராசக்தி படக்குழுவை சார்ந்த ரவி மோகன் , சிவ கார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ் மற்றும் ரவி மோகனின் காதலி , பாடகி கெனிஷாவும் இவர்களுடன் கலந்துக் கொண்டார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிரதமரின் முன்னிலையில் திருவாசகத்தை இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் கவர்ந்தார். விழாவில் கலந்துக் கொள்ளும் முன்னர் சிவகார்த்திகேயனிடம் சில கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்டனர். ஜனநாயகன் திரைப்பட சென்சார் சர்ச்சையை பற்றி கேட்டதற்கு " ஜனநாயகன் திரைப்படம் எப்போது வந்தாலும், அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.
தனது பராசக்தி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார். "இந்தப் பண்டிகை நாடு முழுவதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பரப்பட்டும். டெல்லியில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் முதல்முறையாக பிரதமரைச் சந்திக்கிறேன் , அவரைச் சந்திப்பதில் நான் ஆவலாக உள்ளேன்," என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
அவரிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து கேள்வி கேட்டதற்கு " நான் இங்கு பொங்கலை கொண்டாட வந்துள்ளேன் வேற எதையும் பற்றி கருத்து தெரிவிக்க கூடாது என்று சிவகார்த்திகேயன் மறுத்தார்.