

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் H-1B விசாவின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினார் அதிபர் டொனால்டு டிரம்ப். இது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது வேலைக்காக அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலையில், இந்தியாவிலேயே உள்ளனர்.
அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பை முன்னெடுக்க அதிபர் டிரம்ப் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி H-1B விசா மற்றும் H-4 விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழையும் விண்ணப்பதாரர்களின் அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் சரி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க அதிகாரிகள் உள்ளனர்.
வேலைக்காக அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன், H-1B விசா நேர்காணல் நடைபெறுவது வழக்கம். அவ்வப்போது H-1B விசா நேர்காணல்கள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விசா நேர்காணல்கள் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை H-1B விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கனவுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தற்போது எவ்வித முன்னறிவிப்பின்றி விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நேர்காணல்கள் அனைத்தும் ஜனவரி 2026 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பலருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடக கணக்குகள் ஆய்வின் புதிய கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட நேர்காணல்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு விண்ணப்பதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தங்களது சமூக ஊடக கணக்கு குறித்த விவரங்களையும் விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, தூதரக அதிகாரிகள் H-1B மற்றும் H-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், லிங்க்டுஇன், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக கணக்குகள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டில் இருந்ததா அல்லது இல்லையா என்பது குறித்த தகவல்களை அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு தூதரக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
சமூக ஊடக கணக்குகளை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சூழலில், தனிநபர் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் இருந்துள்ளன. இருப்பினும் தேசிய நலனில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த, விசா பரிசீலனையில் சமூக ஊடக கணக்குகள் குறித்த ஆய்வுகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது பணி அனுமதிகளை புதுப்பிக்க நாட்டிற்கு திரும்பிய எண்ணற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் இந்த புதிய நடைமுறையால், அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சில ஊழியர்களுக்கு சர்வதேச பயணங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு, கூகுள் நிறுவனம் அறிவுரைத்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் கூகுள் நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட H-1B விசா பணியாளர்களை பணியில் அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.