
அமெரிக்காவில் திறமை வாய்ந்த வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்கான H-1B விசா கட்டணத்தை சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதன்படி விசா கட்டணம் 100,000 டாலராக உயர்ந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.88 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வெறும் 215 டாலராக இருந்த விசா கட்டணம் தற்போது 2,000 மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியர்கள் தான் என ஆய்வறிக்கை கூறுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 70%-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சீனா தனது தொழில்துறையை வலுப்படுத்த புதிய K விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் பல வெளிநாட்டு ஊழியர்கள் சீனாவிற்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
STEM என்ற பெயரில் K விசா வழங்கப்படவுள்ளது. இதன்படி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டவர்களை ஈர்க்க சீனா முடிவு செய்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் சீனாவின் K விசா அமலுக்கு வரவுள்ளது. இதன்மூலம் வருகின்ற 2035 ஆம் ஆண்டுக்குள் சீனாவை தொழில்நுட்ப உலகில் அதிசக்தி வாய்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வெளிநாட்டவருக்கான விசா விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவின் K விசா பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனா இடையே நட்புறவு மேம்பட்டுள்ளதால், இந்தியர்கள் சீனாவிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. உலகின் பிரபலமான பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் படித்தவர்கள் K விசா பெற விண்ணப்பிக்கலாம்.
திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் இந்த விசா கொண்டு வரப்பட்டது. வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் இதுதொடர்பான தகவல்களைப் பெற சீன தூதரகங்களை அணுகலாம். சீன அரசின் வழிகாட்டுதல் படி, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது வரை சீனாவில் மொத்தம் 12 விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 13வது விசாவாக K விசா வழங்கப்பட இருக்கிறது.
மற்ற விசாக்களைக் காட்டிலும் K விசாவுக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி உள்ளது. அதோடு மல்டிபிள் என்ட்ரி, நீண்டகால இடைவெளியில் தங்குதல் போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலும் K விசா பெற வேலை வழங்கும் நிறுவனத்தின் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
K விசா வைத்திருக்கும் நபர்கள் கல்வி மற்றும் கலாச்சாரம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம். K விசா சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் உயர்த்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.