போலீஸிடமே 2 லட்சம் மோசடி செய்த ஹேக்கர்கள்.

போலீஸிடமே 2 லட்சம் மோசடி செய்த ஹேக்கர்கள்.
Published on

பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்தனை ஆப்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நாம் இணையப் பணப் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்த பிறகு, பல ரூபங்களில் ஆபத்து நம்மை நெருங்கத் துவங்கிவிட்டது. 

எந்த அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறி வருகிறதோ, அதற்கேற்றவாறு புதிய வழிகளில் மக்களின் பணத்தை ஏமாற்றுவதற்கு மோசடி கும்பல்கள் தந்திரமாக இயங்கி வருகிறது. மக்களுக்கு பல வழிகளில் விழிப்புணர்வு இருந்த போதிலும், ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக் கொள்கிறோம் என்பது தெரியாமலேயே மோசடிக் காரர்களிடம் பலர் மாட்டிக் கொள்கின்றனர். அந்த வகையில் Phone Pe செயலி மூலமாக கேஷ் பேக் கிடைக்கும் என்ற பெயரில் புதிய மோசடி ஒன்று நடந்து வருகிறது. 

இதுவரை இந்த மோசடிக்காரர்களிடம் பல பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், முதல் முறையாக போலீஸ் அதிகாரி ஒருவரே ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டு, ரூபாய் 2 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போன் பே செயலி வழியாக அவர் செய்த பணப் பரிவர்த்தனைக்கு கேஷ் பேக் ஆஃபர் வந்துள்ளதாகக் கூறி, டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் கேஷ் பேக் பணத்தைப் பெற நீங்கள் வேறு ஒரு செயலியைப் பதிவிறக்க வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். 

இதை நம்பிய போலீஸ் அதிகாரி அந்த நபர் கூறிய ஆப்பை இன்ஸ்டால் செய்துள்ளார். அதில் அவர் கூறியது போலவே பல்வேறு கேஷ் பேக் ஆஃபர்கள் காண்பிக்கப்பட்டதால், இதை உண்மையான நம்பி, அவற்றைத் திறந்து பார்த்து சிறிது நேரத்திலேயே, அந்த அதிகாரியின் ஸ்மார்ட்போன் ஹேக்கர் கும்பலின் கட்டுப்பாட்டிற்குச் சென்று விட்டது. 

காவல்துறை அதிகாரியின் ஸ்மார்ட் ஃபோனுக்கான முழு அணுகலையும் பெற்ற ஹேக்கர்கள், உடனடியாக அவர் மொபைலில் இருந்து பரிவர்த்தனைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இப்படியாக அவரது வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 2,12000 ரூபாயை கணப்பொழுதில் திருடியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த மோசடி சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அந்த மர்ம கும்பலை கைது செய்தனர். இதில் ஒரு தம்பதி உட்பட மொத்தம் நான்கு பேர் போலீஸிடம் மாட்டிக் கொண்டனர். இவர்கள் போலியான டிஜிட்டல் வாலட்டுகளைப் பயன்படுத்தி மொத்தமாக 5 வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்துள்ளனர். 

அதிர்ஷ்டவசமாக அந்தக் காவல்துறை அதிகாரி இழந்த மொத்தப் பணமும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com