பஞ்சாப்பில் முடி உதிர்வு சிகிச்சை செய்ததால் சுமார் 67 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது பலரும் தங்களது முடியை பராமரிக்க பல சிகிச்சைகளை செய்துக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் வீட்டிலேயே பலவற்றை செய்து முடியை பராமரிப்பார்கள். ஆனால், பியூட்டி பார்லர் சென்றும் தங்களது முடி மற்றும் முகத்தை பராமரிக்கிறார்கள். எந்த ஒரு கஷ்டமும் இன்றி, ஒரேடியாக தங்களின் முடி உதிராமல் இருக்கவும், நன்றாக வளரவும் சிகிச்சைகளை செய்கிறார்கள்.
இப்படித்தான் பஞ்சாப்பின் சங்ரூரில் ஒரு கோவிலில் ஒரு முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் விற்கப்பட்டது. அவர்கள், இந்த சிகிச்சை மூலம் முடி உதிர்வை தடுப்பதோடு வழுக்கை விழுவதையும் தடுக்கலாம் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதனால், அங்கு தரபட்ட எண்ணெயையும் வாங்கி சென்றிருக்கிறார்கள் மக்கள்.
அப்படி வாங்கிச் சென்று பயன்படுத்தியவர்கள் அதைப் பயன்படுத்தியும் இருக்கின்றனர். பயன்படுத்தியவுடன் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. பின்பு கண் எரிச்சலால் அவதிபட்டு பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியிருக்கிறாரகள். அந்த விசாரணையில், இந்த எண்ணெயை விற்றவர்களிடம் எந்த மருத்துவ சான்றிதழும் இல்லை என்பதும், இப்படி முகாம் நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் வாங்காதது என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
முகாமில் வழங்கப்பட்ட எண்ணெய் தரமற்றதாக இருந்ததால்தான் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகிறார். மேலும் இதனால்தான் இந்த எண்ணெயைப் பயன்படுத்திய பலருக்கும் கண் எரிச்சல், தலைவலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன என்று கூறினார். மேலும் முகாமில் வழங்கப்பட்ட எண்ணெயை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு கோவிலில் முடி உதிர்வுக்கான எண்ணெயை விற்கும்போதே மக்கள் யோசித்திருக்க வேண்டும். இப்போது யாருக்கு நஷ்டம்… கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்கலாமே மக்களே!