

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்கான உணவு, குடிநீர், காத்திருப்பு அறை, ஓய்வறை, மருத்துவ மையம், குளியல் அறைகள், கழிவறைகள், டீக்கடைகள், செல்போன் சார்ஜிங் வசதி, புத்தக கடைகள், ஏடிஎம் வசதி என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய ரெயில்வே தனது கவனத்தை வெறும் பயணச் சேவைகளுக்கு அப்பால் விரிவுபடுத்தி, ரெயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு அன்றாடத் தேவைக்கான வசதிகளை வழங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய சலூன் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது பீகார் மாநிலத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள சசாரம் (Sasaram) மற்றும் தேஹ்ரி-ஆன்-சோன் (Dehri-on-Sone) ஆகிய ரெயில் நிலையங்களில் முடிதிருத்தும் நிலையங்கள் (Hair Salons) அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தப் புதிய வசதி தொடங்கப்படுவதன் மூலம், பயணிகள் தங்கள் பயணத்தின்போதே தங்களை அழகுபடுத்திக்கொள்ள முடியும் என்பதுடன், பயணிகள் முடிவெட்டிக்கொள்ளவோ அல்லது சவரம் செய்துகொள்ளவோ ரெயில் நிலைய வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இருக்காது. இந்த வசதி குறிப்பாக நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும், தங்கள் ரெயிலுக்காகக் காத்திருப்பவர்களுக்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த சலூன் கடைகள் நடத்தப்படும். ரெயில் நிலைய வளாகத்தில் இடம் ஒதுக்கி 3 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். சரியான முறையில் தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ரெயில்வே அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
தினசரி ரெயில் பயணம் மேற்கொள்ளும் அலுவலகப்பயணிளுக்கும் இது ஒரு பெரிய உதவியாக இருக்கும். வேலைக்கு செல்லும் முன் அல்லது திரும்பும் வழியிலேயே சலூன் சேவைகளை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.
இதேபோல ரெயில்நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பயன்படுத்தலாம். இதுபோன்று ரெயில் நிலையங்களில் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதால், பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதை உறுதி செய்கிறது.
முதற்கட்டமாக பீகாரில் தொடங்கப்படும் இந்த முயற்சி வெற்றிகரமாக இருந்தால் அடுத்தபடியாக நாட்டின் பிற மாநிலங்களில் விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே உள்ள உணவு மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் போன்ற வசதிகளுடன், முடிதிருத்தும் நிலையங்கள் போன்ற சேவைகளையும் இணைப்பதன் மூலம், இந்நிலையங்கள் பயணிகளுக்கு இன்னும் அதிக வசதிமிக்க இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், சசாரம் மற்றும் தேஹ்ரி-ஆன்-சோன் ஆகிய ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் ரெயில்வே துறை 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையங்களை மேலும் மேம்படுத்துவதற்காக ரெயில்வே துறை பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இவ்விரு நிலையங்களும் 'அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின்' (Amrit Bharat Station Scheme) கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்பணிகள் தற்போது மிகத் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சென்னை எழும்பூர், தாம்பரம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில் சலூன் வசதி ஏற்படுத்தப்படலாம். இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் ஒரு சிறந்த பயண அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்வதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, சிறுதொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்பும், அதே நேரத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே ரெயில்வே துறையின் முதன்மையான நோக்கமாகும்.
எதிர்காலத்தில் பயணத்தை இன்னும் எளிதாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்காக ரெயில்வே நிர்வாகம் இதுபோன்ற மேலும் பல வசதிகளை ஏற்படுத்தும்.