

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஒரு அறிவிப்பு, பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆட்டம் போட வைக்கும் செய்தியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறையின் இந்த அறிவிப்பின் மூலம், சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
தற்போது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன.
எப்போதும் தேர்வுகள் நடந்து முடிந்தவுடன் விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் கடுமையான பருவமழை மற்றும் புயல் அபாயத்தின் காரணமாக, ஏற்கனவே பல நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை நாட்களில் ஏராளமான வகுப்புகள் நடைபெறாமல் தடை பெற்றதால், அரையாண்டு விடுமுறையை விரைவாகவே முடித்துவிட்டு, அந்த விடுபட்ட வகுப்புகளை ஈடு செய்யும் வகையில் , பள்ளிகளை முன் கூட்டியே திறக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இதன்படி அரையாண்டு விடுமுறை ஜனவரி 1ம் தேதியே முடிவுக்கு வந்து 2ம் தேதி அன்று பள்ளிக்கூடங்கள் திறக்க இருப்பது போல தகவல்கள் பரவின. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய அரையாண்டு விடுமுறையை குறைக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.
பள்ளி நாட்காட்டியில் முன்பே திட்டமிட்டபடியே விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக எப்போதும் காலாண்டு அரையாண்டு விடுமுறை நாட்கள் 9 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முறையில் மூன்று நாட்கள் கூடுதலாக 12 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 12 நாட்கள் விடுமுறையானது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு ஆகியவை வருவதால், இந்தப் பண்டிகை காலத்தை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மேலும், இந்த நீண்ட விடுமுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவும், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. இத்தகைய ஓய்வு மாணவர்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியை (Refreshed mind) அளிக்கும் என்பதால், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும்போது அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் புத்துயிர்ப்புடனும் கல்வியில் கவனம் செலுத்த இது உறுதுணையாக இருக்கும்.