தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்தாலும், தங்கத்துக்கான தேவை இருந்து கொண்டே உள்ளது. காரணம், தங்கத்தை தேவைப்படும் நேரங்களில் பணமாக மாற்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அவசர பணத்தேவைகளுக்கு வங்கிகளில் தங்கத்திற்கு ஈடாக கடன் பெற முடியும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது.
அதேபோல் தங்க நடைக்கடன் வாங்குவதற்கு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மற்ற கடன்களை விடவும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிக மிக குறைவு. இதனால் தான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், வேகமாகவும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
ஆனாலும் தனியார் வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மிகவும் குறைவாக கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் தங்கத்தின் விலை ஏறினாலும் கூட்டுறவு வங்கியில் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் சமீபகாலமாக பலரும் தனியார் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும் நகைக்கடன் அதிகமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமிற்கு 7,500 முதல் 7,800 ரூபாய் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்ட கூட்டுறவு வங்கிகளில், தற்போது ஒரு கிராமுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிகரித்து வரும் தங்கத்திற்கு ஈடாக தங்க நகைக்கடன் தொகை அதிகரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 17-ம்தேதி முதல் ஒரு கிராமிற்கு ரூ.7000 வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த மாதம் கிராமுக்கு 7000 ரூபாய் வழங்குவதற்கான ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த முடிவானது, தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவது சற்று குறைவாக இருந்ததால் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது மக்களுக்கு நிதி உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் வெறும் 31 லட்சம் பேருக்கு, 33,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டதாம். இப்போது கூடுதலாக, 11 லட்சம் பேருக்கு, 12,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.