பொதுவாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தங்கத்தை தேவைப்படும் நேரங்களில் பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், அதன் மதிப்பு எகிறி கொண்டே போகிறது. ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. அதேபோல் தங்க நடைக்கடன் வாங்குவதற்கு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்க நகைகள் வைத்திருப்பவர்கள் இதன் மூலம் எளிய முறையில் நகைக்கடன் பெற முடிகிறது. வரும் நாட்களில் வெள்ளிக்கும் கடன் கொடுக்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்படும் நகைக்கடன்கள் தேர்தல் சமயங்களில் தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் இங்கு நகைக்கடன் வாங்கவே விரும்புகின்றனர். அந்த வகையில் கடந்த தேர்தல் சமயத்தில், 5 சவரனுக்குட்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8,000 வரை கடன் வழங்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,000 வரை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டும் கூட்டுறவு வங்கிகளில் 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய் வரை நகைக் கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தங்கத்தின் விலை ஏறினாலும் கூட்டுறவு வங்கியில் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் பலரும் தனியார் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், அதற்கு ஈடாக தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு கிராமிற்கு ரூ.7000 வழங்க ஒப்புதல் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்ததும், நகைக் கடனுக்கான புதிய தொகை, வரும் நாட்களில் வழங்கப்படும் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.