

தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டு அதிகரித்து விட்டதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது. இது குறித்து தவெக அமைச்சர்கள் அவ்வப்போது பதிலளித்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு காரணமாக சில விஷயங்களைக் கூறினார். அதில் மின்சாரத் துறையின் விபரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போயுள்ளதாகவும் விரைவில் அதற்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக எதிர்க்கட்சியான திமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சரும் இப்போதைய எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்துள்ளார்.
"மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்டதாக கூறுகின்றனர். மின்வெட்டு மற்றும் மின் தேவை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினாரா? எவ்வளவு மின் இருப்பு உள்ளது? எவ்வளவு வாங்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தாரா? மின் விநியோகத்திற்கான ஆய்வுக் கூட்டத்தை கூட அமைச்சர் முழுமையாக நடத்தவில்லை.
துறையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத அரைகுறை நபர்கள் அமைச்சர்களாக உள்ளனர். நிர்வாகத் திறமையே இல்லாதவர்கள் அமைச்சராக இருப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள் நடக்கின்றன. டெண்டர் விடுவதில் யாரும் தவறு செய்ய முடியாது. டெண்டர் விடும் முன் ஆய்வு செய்ய ஒரு குழு இருக்கும். துறை சார்ந்த புரிதல் இல்லை. அதற்கான தகுதியும் இல்லை அதை மறைக்க ஏதேதோ பேசுகின்றனர்.
திட்டங்களை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம், சட்டம் ஒழுங்குக்கு அவகாசம் கேட்கக்கூடாது.அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும் ?தமிழ்நாட்டில் அமைச்சரை மிரட்டும் அளவுக்கு தான் சட்டம் ஒழுங்கு உள்ளதா?
இது ரியல் ஆட்சி அல்ல ரீல்ஸ் ஆட்சி என மக்களை புரிந்து கொண்டு விட்டனர் " என ஆளும் கட்சி மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுக்கடுக்கான குற்றம் சாட்டியுள்ளார்.