
நேற்றைய தினம் ஜூன் 12 ஆம் தேதி, இந்தியாவிற்கு மிகப் பெரிய சோகமான நாளாக இருந்தது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தை நோக்கி பயணப்பட்ட போயிங் விமானம் எழும்பிய நிலையில் மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியின் மேல் விழுந்து மிகப்பெரிய விபத்திற்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மேல் விமானம் விழுந்ததில் அங்குள்ளவர்களும் பலியாகி உள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சோக நிகழ்ச்சி, உலக நாட்டு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
போயிங் விமானம் பறந்து கீழே விழும் வீடியோக்களும், விமானத்தில் உள்ள பயணிகள் எதேச்சையாக எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தில் ஒரு மருத்துவக் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலியாகி உள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அவர்களின் இறுதி நேர மகிழ்ச்சி புகைப்படங்கள் செய்திகளில் வலம் வருகின்றன.
விமானத்தில் பயணி ஒருவர் அங்குள்ள சிறிய ரக டிவிகளில் உள்ள அனைத்து பட்டன்களும் வேலை செய்யாததை வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த சீட்டின் எதிரில் உள்ள பல டிவிகளும் வேலை செய்ய வில்லை. இது போன்ற சூழலில் ஒரு பயணி தனது பின்புறம் அமர்ந்திருந்த குஜராத் மாநில முன்னாள் முதல்வரான விஜய் ரூபானியை படம் பிடித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்திருந்தார்.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வரான விஜய் ரூபானியும் உயிரிழந்தார். லண்டனில் இருக்கும் தனது மகளை பார்க்க செல்லும் அவரும் இந்த விமானப் பயணத்தில் இணைந்தார். ஆனந்திபென் பட்டேலுக்கு பிறகு குஜராத்தின் முதல்வரான விஜய் ரூபானி, 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
விஜய் ருபானிக்கு எப்போதும் ஜோதிடம், ஜாதகத்தின் மேல் நம்பிக்கை அதிகம். அதிலும் அவர் எண் கணித்தை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றி வந்துள்ளார். மேலும், அவர் எப்போதும் தனது எந்த செயலிலும் அதிர்ஷ்ட எண்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.
அவரது பயண தேதியை கூட அதிர்ஷ்ட எண்ணை வைத்து தான் தீர்மானித்து இருந்தார். அந்தளவுக்கு அதிர்ஷ்ட எண் மீது தீவிர நம்பிக்கை அவருக்கு இருந்தது. விஜய் ரூபானி 1206 என்ற அதிர்ஷ்ட எண்களை தான் தனது வாகனங்களின் பதிவு எண்ணாக பயன்படுத்தி வந்தார். அவரது இரு சக்கர வாகனம் , கார்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் இது தான் பதிவு எண்ணாக இருந்துள்ளது .
இதே எண்ணை தனது பயண தேதியாகவும் விமான டிக்கட்டை புக் செய்து பயணித்து உள்ளார். அவரது அதிர்ஷ்ட எண்ணாக 12.06 ஆம் தேதியில் தான் அவரது இறுதிப் பயணமும் அமைந்து விட்டது . அவரது அதிர்ஷ்ட எண் வரும் நாளில் அமைந்த சோக முடிவை பற்றி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.