
தொழில்நுட்பம் வளர வளர அதனால் நன்மைகள் அதிகம் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆன்லைனில் மோசடி செய்து பணம் திருடுபவர்கள் புதுப்புது வழிகளை பயன்படுத்துகின்றனர். யுபிஐ மூலம் பணம் மோசடி, வாட்ஸ் அப் மற்றும் மெசேஜில் லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய வைத்து அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடுவது, போனில் போலியான முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசி முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என ஆசை வார்த்தைகளை கூறி நம்மை முதலீடு செய்ய வைத்து பணம் மோசடி செய்வது என மோசடி செய்பவர்கள் புதுப்புது டிரிக்குகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இதுபோல் ஆன்லைன் மோசடிகளில் இருந்து காப்பதே பெரிய விஷயமாக இருக்கும் பட்சத்தில், ஆன்லைன் மோசடிகளில் மாட்டாமல் இருப்பது எப்படி..? அப்படியே மாட்டினாலும் உங்களுடைய பணத்தை திரும்ப பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் மோசடி செய்து உங்களது பணம் திருடப்பட்டு விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதைத்தான். இதை செய்தால் மட்டுமே உங்களது பணத்தை திரும்ப பெறமுடியும். அதாவது நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ ஆன்லைன் மூலம் பணத்தை ஏமாந்தவர்கள் உடனடியாக இந்தியாவில் தேசிய சைபர் க்ரைம் உதவி எண் 1930க்கு போன் செய்து புகாரை பதிவு செய்ய வேண்டும். உங்கள் பணம் திருடுபோய் 1 மணிநேரத்திற்குள் புகார் செய்தால் மட்டுமே நீங்கள் ஏமாந்த பணத்திலிருந்து பெரும்பகுதியை திரும்ப பெற முடியும் இல்லையெனில் நீங்கள் பறிகொடுத்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் கடினம் என்பதை மறந்து விட வேண்டாம்.
1930 என்ற எண்ணிற்கு புகார் செய்த பின்னர் சைபர் கிரைமின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று புகார் செய்வதுடன் பணம் பரிமாற்றம் செய்த நேரம், உங்களிடமிருந்து திருடப்பட்ட பணம் எவ்வளவு, நீங்கள் எந்த கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தீர்கள், பண பரிமாற்றம் செய்ததற்கான ஐடி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக புகாராக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு புகார் செய்வதன் மூலம் சைபர் கிரைம் அதிகாரிகளால் உடனடியாக அந்த குறிப்பிட்ட கணக்குகளை முடக்கி உங்களுடைய பணத்தை மீட்பதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்வதன் மூலம் உங்களது புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் நீங்கள் அடிக்கடி தெரிந்து கொள்ள முடியும்.
காவல்துறையினரும் பைசர் கிரைம் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்னவென்றால், ஆன்லைன் நட்பு மற்றும் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே. எந்தவொரு பணமோ அல்லது கிரிப்டோவோ மாற்றும் முன், முழுமையாக விசாரித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.