இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
காங்ரா மாவட்டத்தில் உள்ள மனூனி காட் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால், இந்திரா பிரியதர்ஷினி நீர்மின் திட்டப் பணி நடைபெறும் இடத்தில் அமைந்திருந்த தொழிலாளர் குடியிருப்பு வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 15 முதல் 20 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் மாயமாகியுள்ளதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குலு மாவட்டத்தில் உள்ள சைன்ஜ் பள்ளத்தாக்கிலும் மேக வெடிப்பு காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்னோ கேலரி (மணாலி) மற்றும் ஹோராநகர் (பஞ்சார்) ஆகிய பகுதிகளிலும் மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளன. சைன்ஜ் பகுதியில், திடீர் வெள்ளத்தில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர். நான்கு வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.
நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குலு மாவட்டத்தில் உள்ள தர்மசாலா - மனாலி சாலை மற்றும் மணாலி - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 2,000 சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மழைநீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.