சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் துவங்கி தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மாநகர சாலை எங்கும் மழை நீர் தேங்க தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் தி .நகர் , மேற்கு மாமபலம் , திருவல்லிக்கேணி, எழும்பூர், பட்டினப்பாக்கம், மெரினா, ஆழ்வார்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மாநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரம் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா, தென்மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இது சற்று வலு குறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதியின் அருகில் நிலவக்கூடும். அதன்பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது