கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கென்யாவில் கடந்த ஒரு வார காலமாக வரலாறு காணாத மழைப் பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தநிலையில் கென்யாவின் தலைநகரமான நைரோபி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. அதேபோல், குடியிருப்பு கட்டடங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை பெய்த மழையால், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் சமீபத்தில் துபாயில் அதிக அளவு மழை பெய்ததால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகின. ஆனால், மழை நின்றவுடன் துபாய் விரைவாகவே இயல்பு நிலைக்கு மாறியது. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் மழை பாதிப்புகளால், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத்தொடர்ந்து தற்போது கென்யாவிலும் தொடர்ந்து மழைப்பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும், கென்யாவில் இன்னும் சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்று கென்யாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி, கென்யா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி நிறைய பேர் காயங்களுடன் உயிர்த் தப்பித்துள்ளனர். வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் கென்யா அரசு, உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது. அதேபோல் ஐநா சார்பாகவும் உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த கனமழையால், கென்யா மட்டுமல்ல 23 ஆப்பிரிக்க நாடுகள் தற்போதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. கென்யாவைத் தொடர்ந்து தான்சானியா நாட்டிலும் 58 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழைப்போலவே கடந்த 1997 மற்றும் 1998 ஆண்டுகளிலும் பெய்தது. அப்போது ஆப்பிரிக்கா முழுவதும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.