ரஷ்யாவில் கனமழை… அணை உடைந்ததால் பதற்றம்... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

Russia Flood
Russia Flood

ஆஸ்திரேலியாவை அடுத்து ரஷ்யாவிலும் சென்ற வாரத்திலிருந்து வரலாறு காணாத அளவு தொடர்ந்து கனமழைப் பெய்து வருகிறது. இதனால் இரண்டு பகுதிகளிலுமே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ரஷ்யாவில் அணை உடைந்ததால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் கனமழை பெய்து வருவதால் கஜகஸ்தான் அருகிலுள்ள ஓரன்பார்க் பகுதியில் அணை உடைந்ததாக, ரஷ்யா சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. அந்த நாள் இரவு முழுவதும் அவசர சேவைகள் விறுவிறுப்பாக நடந்தன. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் 4000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து இன்னும் அந்தப் பகுதியில் சேவைகள் நடந்து வரும் நிலையில் ஓரென்பர்க் கவர்னர் ஒரு செய்தியை வெளியிட்டார். “ 1,019 குழந்தைகள் உட்பட 4,208 பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,500 குடியிருப்புகள் இதுவரை சேதமடைந்துள்ளன.” என்று வெளியிட்டார்.

ஏற்கனவே இந்த அணையின் மீது 2014ம் ஆண்டு கட்டுமானம் சரியில்லை என்றும், பாதுகாப்பான அணையாக இல்லை என்றும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்போது  கவர்னர் டென்னிஸ் பாஸ்லர் கூறுகையில், "இது குறிப்பிட்ட அளவு மழை நீரை மட்டுமே தாங்கக்கூடியது. ஆனால் இப்போது பெய்த மழையின் அளவை அந்த அணையினால் தாங்க முடியவில்லை." என்று பதிலளித்தார்.

அந்தப் பகுதியின் உரால் ஆறில் தற்போது அதிகபட்ச நீர்மட்டமாக 855 செமீ உள்ளது. இதுவே மிகவும் அபாயகரமானதாக இருக்கும் சூழலில், இன்னும் அதிகரிக்கும் என்று ரிப்போர்ட் கூறுகிறது. ஆகையால் இந்த நகரம் முழுவதும் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

“இன்று இரவு நதி ஆபத்தான நிலைக்கு மாறவுள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் இனி பாதிக்கப்படப் போகும் இடங்களிலும் இருக்கும் மக்கள் வெளியேறுவது ஒன்றே வழி. வேறு எந்த வழியும் நமக்கு இல்லை. வெளியேற மறுப்பவர்களை போலீஸ் அதிகாரிகளை வைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவோம்.” என்று நகரத்தின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
Alexa உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி... தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுது பாத்தீங்களா?
Russia Flood

கஜகஸ்தானில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பேரிடர் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய ஆசிய நாடுகளில் உள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டுமென்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com