களமிறங்கிய அமலாக்கத்துறை.. மாயமான ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்!

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்
Published on

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் இந்தியா எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துவிட்டார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் (13 தொகுதிகள்) தனியாகக் களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால், தில்லியிலும் (7) காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி சீட் ஒதுக்குமா என்பது சந்தேகம்தான். போதாக் குறைக்கு, அமலாக்கத்துறை சம்மனால் கெஜ்ரிவாலுக்குத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். மேலும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை, ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை பின்தொடர்ந்து வருகிறது.

தற்போது ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை, நிலமோசடி விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன்கள் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்றன. இதுவரையில் மட்டும் அமலாக்கத்துறையின் ஏழு சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
Alpenglow நிகழ்வு: இந்து குஷ் மலையில் நடந்த அதிசயம்.. வைரலாகும் NASA-வின் புகைப்படங்கள்! 
ஹேமந்த் சோரன்

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஹேமந்த் சோரனை விசாரிக்க ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தை இல்லத்துக்குச் சென்றனர்.

ஆனால், அவர் அங்கு இல்லாததால், தில்லியில் அவரது முதல்வர் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் ஹேமந்த் சோரன் இல்லை. அதேசமயம் சோதனியில் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ள அதிகாரிகள், சட்டவிரோத நிதியை பயன்படுத்தி வாங்கப்பட்டதாக கூறி ஹேமந்த் சோரனின் பி.எம்.டபிள்யூ காரை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்னொருபக்கம், அமலாக்கத்துறையின் சம்மனை நாளை உச்ச நீதிமன்றத்தில் அவர் எதிர்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுவரையில், ஹேமந்த் சோரன் எங்கு இருக்கிறார் என்ற தகவல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது வீட்டைச் சுற்றி 100 மீட்டர் அளவுக்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com