இஸ்ரேல் தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததையடுத்து, தற்போது தலைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனானை தாக்கி வருகிறது இஸ்ரேல். இதில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 1000 கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அமெரிக்கா உட்பட சில உலகநாடுகள் போரை கைவிடும்படி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களின் இராணுவம் ஹிஸ்புல்லாவை முழு பலத்துடன் தாக்கும் என உறுதியாக தெரிவித்தார். தங்களின் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை நிறுத்த மாட்டோம் என்றும் முதலில் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். ஹிஸ்புல்லா ராணுவ தளபதிகளையும் கமாண்டர்களையும் குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேலில் சைரன் சத்தம் ஒலித்தப்படியே உள்ளது.
லெபனானில் மக்கள் எங்கையும் தங்க பாதுகப்பான சூழல் இல்லை என்பதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான முகமது ஹுசைன் ஸ்ரவுர் (Muhammad Hussein Srour) உயிரிழந்தார்.
இதனையடுத்து நேற்று இரவு இஸ்ரேல் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறி வைத்து தொடர் தாக்குதளை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது. தமது இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நஸ்ரல்லாவைத் தவிர, ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணி என்று அழைக்கப்படும் தளபதி அலி கராக்கி, மற்ற அதிகாரிகளுடன் கொல்லப்பட்டதாகக் கூறியது.
ஆனால், இதுதொடர்பான எந்த தகவலையும் லெபனான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல் இஸ்ரேல் ராணுவம் மட்டுமே அறிவித்திருக்கிறது.