
இந்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவரும், தத்துவஞானியும் ஆவார். இவர் நம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக ஆயுதமின்றி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைத்து அறவழியில் புரட்சி செய்து நம் இந்திய நாட்டிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்று தந்தார் நம் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள்.
இந்நிலையில் இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் அரிய எண்ணெய் ஓவியம் லண்டன் நகரில் நடந்த ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி கடந்த 1931-ம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் (Clare Leighton)சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். காந்தி உட்கார்ந்து இருக்கும் நிலையில் வரையப்பட்ட ஒரே எண்ணெய் ஓவியம் அது என்று நம்பப்படுகிறது. இந்த ஓவியம் 1974-ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
அந்த ஓவியத்தின் பின்புறத்தில் காந்தியின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாய் எழுதிய கடிதம் இன்றும் உள்ளது, அதில் ‘மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைவதற்கு நீங்கள் பல காலைகள் இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. 'உண்மையே கடவுள்' என்ற தலைப்புடன் 'எம்.கே. காந்தி 4.12.31' என்று எழுதப்பட்ட அந்த அரிய ஓவியம் லண்டனிலுள்ள சர்வதேச ஏல மையத்தில் விற்பனைக்கு வந்தது. கடந்த ஜூலை 7 முதல் 15 வரை நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் இந்த அரிய ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.
இந்த ஓவியம் தோராயமாக ரூ.58 லட்சம் முதல் ரூ. 81 லட்சம் வரை ஏலம் போகும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஓவியத்தை வரைந்த கிளேர் லெய்டன் இதை வைத்திருந்தார். 1989ம் ஆண்டு அவர் மரணத்திற்கு பிறகு ஓவியம் அவரின் குடும்பத்தாருக்குச் சென்றது. 1974-ம் ஆண்டு, காந்தியின் ஓவியம் பொது கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தபோது, சில சமூக விரோதிகளால் கத்தியால் கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தில் பல இடங்களில் பழுதுபார்த்த அறிகுறிகள் காணப்படுகின்றன.
இந்த ஓவியம் ஒரு ‘மறைக்கப்பட்ட புதையல்’ என்று லெய்டனின் மருமகன் காஸ்பர் கூறுகிறார். இந்தியா சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இருந்தபோது வரையப்பட்ட இந்த ஓவியம், ‘மகாத்மா காந்தி தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்ததைக் காட்டுகிறது’ என்று காஸ்பர் கூறினார். மேலும், இது காந்தியின் உண்மையான கடைசி படமாக இருக்கலாம் என்றும் இவர் கூறினார்.