இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட எண்ணற்ற போராட்ட வீரர்களை நாம் அறிவோம். சுதந்திரத்திற்குப் பின் இந்திய பிரிவினையை விரும்பாத சிலரில் முக்கியமானவராக இருந்தவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரான எல்லை காந்தி என்று செல்லமாக அழைக்கப்பட்ட, கான் அப்துல் கஃபர் கான். அவரது நினைவு நாளான இன்று அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சாகான், பாட்ஷாகான் என்றும் அழைக்கப்படும் முஸ்லிம் தலைவரான இவர், 1890 பிப்ரவரி 6ல் அன்றைய பஞ்சாப் மாகாணத்தின் உத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்து தேச நலனுக்காக அகிம்சை வழியைக் கடைபிடித்து பெரும் புகழ் பெற்று 1988ல் தமது 98 வயதை நிறைவு செய்து மறைந்தார்.
இவர் தமது அரசியல் வாழ்க்கையின் துவக்கமாக, 1919ல் மகாத்மா காந்தியுடனான சந்திப்புக்குப் பின் அரசியலில் இறங்கி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார். அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி பிரிட்டிஷாரை எதிர்த்தார். 1946ம் ஆண்டு நவகாளியில் நடைபெற்ற கலவரத்திற்குப் பின் காந்தியுடன் அமைதிப் பயணம் மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் சிறந்த சீடராகவும் பின்னாளில் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார்.
காந்தியக் கொள்கையை பின்பற்றிய இவர், இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தானுக்குச் சென்றாலும், இந்திய அரசியல் தலைவர்கள் அவரை அன்புடன் (இந்திய) ‘எல்லைக்கப்பால் காந்தி’ என அழைத்து, அதுவே நாளடைவில் சுருக்கமாகி எல்லை காந்தியாக நாடு முழுவதும் அறியப்பட்டார்.
பஷ்டூன்கள் எனப்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இனக்குழுவினரின் புகழ் பெற்ற தலைவரான இவர், இந்திய (பாகிஸ்தான்) பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். மேலும், காங்கிரஸ் பிரிவினையை ஆதரித்ததுடன், ‘எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே’ என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லி தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.
இவர், தமது எழுச்சிமிக்க உரையால் மட்டுமே மக்களைக் கவர வேண்டுமே தவிர, வன்முறையை கைக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததுடன், மற்றவர்களுக்கும் அதையே அறிவுறுத்தினார்.
இந்தியாவில் இருந்த பர்தா முறையை இஸ்லாமியத் தன்மைக்கு எதிரானது என்று துணிவான தனது கருத்தை முன்வைத்து விமர்சித்தவர். காங்கிரஸ் பதவி இவரைத் தேடி வந்தபோது, "நான் எப்பொழுதும் மக்களின் சேவகன். எனக்குத் தலைவர் பதவி வேண்டாம்” என்று மறுத்தவர்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்குப் பயணமாக வந்த அவர், இந்து முஸ்லிம் கலவரங்கள் பெருகியிருப்பதைப் பார்த்து, ‘இஸ்லாமியர்களைத் தீண்டத் தகாதவர்கள் போல நடத்துகிறீர்கள். இது தவறு. வெறுப்பை விதைத்து அறுவடை செய்ய எண்ணாதீர்கள்” என்று அறிவுறுத்திய அதே சமயம், இந்திய இஸ்லாமியர்களிடம், "நீங்கள் வன்முறையில் ஈடுபடாதீர்கள். நீங்கள் குரானின் அன்பு வழியில் இயங்குங்கள். அப்படிச் செயல்படாவிட்டால் நீங்கள் தீயவர்கள் ஆகிறீர்கள்” என்றும் அறிவுறுத்தியதாகச் சொல்லப்படும் அவரைப் பற்றிய குறிப்புகள் மதங்கள் தாண்டிய அவரின் நல்லெண்ணெத்தின் சான்றாகிறது. 1985ல் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1987ல் பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல் நாட்டவர் என்ற பெருமையை பெற்றவராவார்.
இவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெசாவரில் இருந்து கைபர் கணவாய் வழியாக சலாலாபாத்துக்குச் சென்றனர். அச்சமயம் சோவியத் ஆப்கானியப் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் இவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது இவரது சிறப்பை சொல்லும் நிகழ்வாகும்.
மத நல்லிணக்கத்தை அகிம்சை வழியில் உணர்த்திச் சென்ற எல்லை காந்தியை என்றென்றும் நம் மனதில் நிறுத்தி போற்றுவோம்.