

கார்த்திகை தின தீப திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் , தீபம் ஏற்ற அனுமதிக்குமாறு மதுரை உயர்நீதி மன்றக் கிளையில், ஏழுமலை ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் , திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை என்று டிசம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தார். கார்த்திகை நாள் அன்று தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கார்த்திகை நாளின் போது தீபம் ஏற்ற சென்றவர்களை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அன்றைய தினம் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் , உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியிலேயே ஏற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மீண்டும் இராம ரவிகுமார் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த அதே நீதிபதி சுவாமிநாதன், தனது முந்தைய உத்தரவைச் செயல்படுத்தக் கூறியும், மனுதாரர் இராம ரவிகுமாருக்கு பாதுகாப்பாக ,மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் 10 பேரை அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். காவல் துறையினர், இந்தத் தடை உத்தரவைச் சுட்டிக்காட்டி, தீபம் ஏற்ற சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் தீபம் ஏற்ற சென்றவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் அங்கு கூடியிருந்தவர்களை கைது செய்தனர்.
மேலும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராகத், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வில் அவசர மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. இராமகிருஷ்ணன் வசம் வந்தது. இரு நீதிபதிகள் அமர்வு , மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு , இந்த மேல்முறையீடு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தவிர்க்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே செய்யப்பட்டுள்ளது என்று கூறியது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் பகுதியில் பிறப்பிக்க 144 தடை உத்தரவை ரத்து செய்தார். மேலும் , மதுரை மாநகர காவல் ஆணையர் உடனடியாக மனுதாரருக்கும் அவரது குழுவினருக்கும் பாதுகாப்பு அளித்துத் தீபம் ஏற்ற உதவ வேண்டும் என்று உத்தரவிட்டார் , ஆயினும் அவரது உத்தரவு செயல்படுத்தப் படவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. இன்று (டிச.5) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு, மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் , இந்த விவகாரத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் , வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரினார். இதனை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்