Drug prevention
Cool Lip

புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொடங்கியது ஏழரை!

Published on

மதுக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில் குடி நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதோடு, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதைத் தாண்டி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் சொல்லிக் கொள்ளும்படியான 'கூல் லிப்' போதைப்பொருள் பழக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போட்டி போட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கூல் லிப் விவகாரத்தில் ஹை கோர்ட் கிளை அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உட்பட போதை பொருட்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும் கூல் லிப் போன்ற போதை பொருளை அதிகம் விற்பனை செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் கைதானவர்களின் முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் மனுக்கள் அதிகளவு ஐகோர்ட் கிளைக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, புகையிலை பொருட்களுக்கு பள்ளி மாணவர்கள் அதிக அளவு அடிமையாகி உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

இப்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க, போதை பொருட்கள் பயன்பாடு காரணம். இளம் தலைமுறை சிந்திக்கும் திறனை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்? போதைப் பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் கூல் லிப் எனும் போதை பொருளை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இதனை பாதுகாப்பாற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தி நமது கல்கிஆன்லைன் பக்கத்தில் ஏற்கனவே வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
போதைப் பொருள் தடுப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்னெடுப்பு!
Drug prevention

இதன் பின்னர் நடந்த விசாரணை முடிவுக்கு பின்னர் அளிக்கப்பட்ட உத்தரவில், அரியானா மாநிலம் சோனாபேட் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனம், கர்நாடகா மாநிலம் தும்கூர் சேர்ந்த ஒரு நிறுவனம், கர்நாடகா மாநிலம் அந்த ரசன அல்லி இண்டஸ்ட்ரி ஏரியாவில் உள்ள ஒரு நிறுவனம் என மூன்று நிறுவனங்களை தானாகவே முன்வந்து எதிர்மனுதாரர்களாக இந்த கோட் சேர்க்கிறது. இந்த புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஹை கோர்ட் கிளை பதிவாளர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விஷயம் என்னவெனில், புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு போடுவது, அவர்களின் கடைகளுக்கு சீல் வைப்பது என்பதோடு விடாமல், நாடு முழுவதும் புகையிலை போதைப் பொருளுக்கான தடை கொண்டுவர முயற்சி எடுத்துள்ள நீதிமன்றத்தின் இந்த சீரிய முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்க வேண்டிய ஒன்று. இது தொடக்கம் மட்டுமே. இதை பார்த்து மற்ற மாநிலங்களிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, புகையிலைக்கு எதிராக நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கும் பட்சத்தில், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com