எந்த பல்கலைக்கழகத்தின் எந்த படிப்பு பல்வேறு மேல்படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் இணையானது என்பதைச் சார்ந்த அரசாணை ஒன்றை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில், சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.காம் இ-காமர்ஸ், பி.காம் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பி.காம் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நோக்கில் பி.காம் படிப்புக்கு சமமானது ஆகும்.
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் பி.காம் அக்கவுண்டிங் மற்றும் ஃபைனான்ஸ் படிப்பு, டெல்லி பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் ஆனர்ஸ் படிப்பு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பு ஆகிய படிப்புகள் பி.காம் படிப்புக்கு இணையானவையாக இனி கருதப்படும்.
சென்னை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட் (விருப்ப பாடம்- வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்) படிப்பு பி.எட் (வணிகவியல் விருப்பப்பாடம்) படிப்புக்கு இணையானது ஆகும்.
அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா வழங்கும் பி.எட் (விருப்ப பாடம் - ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பு பி.எட் (விருப்பப் பாடம் - ஆங்கிலம்) படிப்புக்கு சமமானதாக இனி கருதப்படும்.
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, எம்.பி.ஏ படிப்புக்கு இணையானது ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வரும் எம்.எஸ்.சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்பு, எம்.ஏ ஜேனர்லிசம் ஆகியவை மாஸ் கம்யூனிகேஷன் பட்டத்துக்கு சமமானது ஆகும். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை அளிக்கும் எம்எஸ்சி பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ் படிப்பு எம்எஸ்சி ஸ்டேடிஸ்டிக்ஸ் படிப்புக்கு இணையானதாக கருதப்படும்.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி (தன்னாட்சி அந்தஸ்து) வழங்கும் பி.எஸ்.சி ஹோம் சயின்ஸ் (நியூட்ரிஷன், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டயட்டிக்ஸ் பட்டம் பி.எஸ்.சி ஃபுட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிஷன் படிப்புக்கு சமமானதாக இனி கருதப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வரும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பு எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையானதாகும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்.சி கம்யூனிகேஷன் மற்றும் ஜேர்னலிசம் படிப்பு எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்புக்கு இணையானது ஆகும். சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்.சி கவுன்சிலிங் சைக்காலஜி படிப்பு எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்புக்கு இணையானதாகின்றது.
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கும் டிப்ளமா இன் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் டிப்ளமா இன் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்புக்கு சமமானது ஆகும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த படிப்புகளை படிக்கும்/படித்த மாணவர்கள் தன்னுடைய படிப்புக்கு இணையான படிப்பு எது என்பதை அறிந்து அதற்கு ஏற்ற மேற்படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் பங்கு பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்