ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்து கோயில் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் தொடரும் இந்து கோயில் தாக்குதல்!

ஸ்திரேலிய நாட்டில் அடிக்கடி இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள ஸ்வாமி நாராயண் கோயிலின் மீது சமீபத்தில் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். காலிஸ்தான் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலால் அந்தக் கோயிலின் பல பகுதிகள் சேதமடைந்தன. மேலும், அவர்கள் இந்தியாவுக்கு எதிரான சில வாசகங்களையும் அந்தக் கோயிலில் எழுதி வைத்து விட்டுச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காரம் டாவ்ன்ஸ் நகரில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற சிவா விஷ்ணு கோயிலை நேற்று முன்தினம் இந்த பயங்கரவாத அமைப்பினர் மீண்டும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். அதோடு, இந்திய எதிர்ப்பு வாசகங்களையும் அங்கு எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தக் கோயில் புலம் பெயர்ந்த தமிழர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வழிபாட்டுக்குச் சென்றிருந்த பக்தர்கள் இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இப்பகுதியில் வசிக்கும் உஷா செந்தில்நாதன் என்கிற பக்தை கூறும்போது, “காலிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் இங்கே சிறுபான்மையினராக வசித்து வருகிறோம். அதனால் இந்தக் கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது ஆஸ்திரேலிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

அதேபோல், “ஆஸ்திரேலியாவின் இந்து கவுன்சில் நிர்வாகி மக்ராண்ட் பகவத் கூறும்போது, “காலிஸ்தான் ஆதரவாளர்களின் இதுபோன்ற வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல் செயல்களுக்கு ஆஸ்திரேலிய அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறினார்.

மெல்போர்ன் நகரின் இந்து கவுன்சில் உறுப்பினர் சச்சின் மகதே கூறும்போது, “காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தைரியம் இருந்தால், விக்டோரியா பார்லிமென்ட் கட்டடச் சுவற்றில் இதுபோன்ற அவர்களின் ஆதரவு வாசகங்களை எழுதிப்பார்க்கட்டும். அதை விடுத்து, இந்து வழிபாட்டுத் தலங்களின் மீது கை வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com