
ஆப்பிரிக்க நாடான கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி, அங்கிருந்துகரீபியன் தீவு நாடான டிரினிடாட்-டொபாகோ சென்றார். அங்கேயே பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பும், ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. 1999-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய பிரதமர் ஒருவர் டிரினிடாட் டொபாகோ செல்வது இதுவே முதல் முறையாகும். கவுவாவில் திரண்ட ஏராளமான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் டொபாகோவில் 45 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு பிரதமரும், இந்தியா வம்சாவளியுமான கமலா பெர்சாத் பிசேசர், மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கூறினார். பின்னர் தான் கொண்டு சென்ற கும்பமேளா புனித நீரை அந்த நாட்டு பிரதமர் கமலாவிடம் வழங்கினார்.
2 நாள் பயணமாக டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் டொபாகோ’ விருது வழங்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் "சிறந்த அரசியல் திறமை, கொரோனா பெருந்தொற்றில் காட்டிய மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை" அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.