2024 ஆண்டு இறுதியில் எச்.ஐ.வி நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது! அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறையான FDA வினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த மருந்திற்கு லெனகாவிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லெனகாவிர் என்பது எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு ஊசி. இந்த ஊசியை போட்டுக் கொள்ளும் ஒருவரை ஆறு மாதங்கள் வரை எய்ட்ஸ் நோய்க்கு எதிராக பாதுகாக்கிறது.
இந்த தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. லெனகாவிர் தடுப்பு மருந்து மூலம் உலகளாவிய எய்ட்ஸ் நோய் பரவலை பெருமளவில் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த மருந்து சரியாக செயல்பட ஆரம்பித்தால், சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் லிண்டா கெயில் கூறினார்.
கிட்ட தட்ட அரை நூற்றாண்டு காலமாக முயற்சி செய்தும், எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு மிக அதிக இருக்கிறது. பல வித பரவல்கள் மூலம் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கூட ஏராளமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லெனகாவிர் தடுப்பு ஊசியை வருடத்திற்கு இரண்டு முறை போடப்பட வேண்டும். இந்த ஊசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அடுத்த ஆறு மாதம் வரை எய்ட்ஸ் நோய் பரவாமல் பாதுகாக்கும். இரத்தத்தின் மூலம் பரவும் எச்.ஐ.வி நோய்த் தொற்றுகளுக்கு எதிராக இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன.
முதலில் ஆப்பிரிக்காவில் உள்ள இளம் பெண்களிடம் இந்த மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவ பரிசோதனைகளில், இந்த மருந்து அவர்களுக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றை பூஜ்ஜியமாகக் குறைத்தது கண்டறியப்பட்டது. செயல்திறன் 100 சதவீதமாக இருந்தது. பின்னர் நான்கு கண்டங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் 99.9 சதவீத செயல்திறனைக் காட்டின.
WHO இன் அறிக்கையின் படி, லெனகாவிரில் நடத்தப்பட்ட இரண்டு மருத்துவ பரிசோதனைகள் உலகளவில் எச்.ஐ.வி தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியுள்ளன. மற்ற வகை மருந்துகளை உட்கொள்பவர்கள் லெனகாவிரைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக வித்தியாசத்தை உணர முடியும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, லெனகாவிரின் பயன்பாடு வாய்வழி மருந்துகளுடன் தொடர்புடைய பல சிக்கல்களை ஏற்படுத்தாது.
மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் சோர்வு போன்ற சிரமங்களை லெனகாவிர் பயன்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது மருத்துவத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இந்த மருந்தை 'சயின்ஸ்' பத்திரிகை '2024 ஆம் ஆண்டின் திருப்புமுனை' யாகத் தேர்ந்தெடுத்துள்ளது