
கோவிட் என்னும் பெருந்தொற்றால் உலக நாடுகள் மொத்தமாக ஸ்தம்பித்தன. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இன்னொரு வைரஸ் (HMPV) மிக வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. HMPV என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த தொற்றானது, மிக வேகமாக பரவி வருவதாகவே சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் influenza A, HMPV, Mycoplasma pneumoniae, Covid-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் பரவி வருவதாக சில பயனர்கள் தெரிவிக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்ட வருகின்றன. சிலர், மருத்துவமனைகளும் தகன மையங்களும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சீனா அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதாகக் கூட தகவல் கசிந்துள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. HMPV என்ற வைரஸ் குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது. இதில் கோவிட் அறிகுறிகளும் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல மாகாணங்களில் வைரஸ் பரவி வருவதால் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என்றே உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 'SARS-CoV-2 (Covid-19)' என்ற சமூக ஊடகப் பயனர், சிறார்களுக்கான மருத்துவமனைகள் நிமோனியா மற்றும் வெள்ளை நுரையீரல் பாதிப்புகளால் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் சீனா பல்வேறு சுவாச தொற்று நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று செய்தி மாநாட்டில் அதிகாரி கான் பியாவோ தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டுடன் (குளிர்காலம் மற்றும் வசந்த காலம்) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை தற்போது வரையில் குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வடக்கு மாகாணங்களில், சமீபத்தில் கண்டறியப்பட்டவைகளில் rhinovirus மற்றும் human metapneumovirus போன்ற நோய்க்கிருமிகளும் அடங்கும் என்றும், 14 வயதிற்குட்பட்டவர்களிடையே human metapneumovirus நோய்க்கிருமிகள் அதிகம் காணப்படுவதாகவும் கூறினார். human metapneumovirus (ஹெச்.எம்.பி.வி) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாளம் காணப்படாத நிமோனியா போன்ற தொற்றுக்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, டிசம்பர் 16 முதல் 22 வரையான வாரத்தில் சுவாச சம்பந்தமான நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது.
ஷாங்காய் மருத்துவமனையின் சுவாச நிபுணர் ஒருவர் சமீபத்திய பேட்டியில், metapneumovirus-ஐ எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்மூடித்தனமாக பயன்படுத்த கூடாது என்று பொதுமக்களை எச்சரித்துள்ளார். மேலும் அதன் அறிகுறிகள் ஜலதோஷத்தை ஒத்திருக்கும் என்றும் ஆனால் இதற்கு தடுப்பூசி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.