இஸ்ரேல்-ஈரான் போர், இஸ்ரேல் – காசா போர் என மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து சில மாத காலங்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்தவகையில் தற்போது, இந்தியாவை நோக்கி வந்த வணிகக் கப்பலை, ஈரான், காசா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் ஹவுதி படை தாக்கியது, நடுக்கடலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், போரை உடனடியாக நிறுத்த கோரியும் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், காசா மீதான ரஷ்யாவின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஹவுதி படை இயங்கி வருகிறது. கடல் வழியே செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்கி, ஏமனில் உள்ள ஹவுதி படை தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Red sea பகுதியில் ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய் கப்பல் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பனாமா கொடியுடன் பறந்து வந்த இந்த கப்பல் முன்னதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தக் கப்பல் சமீபத்தில்தான் விற்கப்பட்டது என்றும், அதன் தற்போதைய உரிமையாளர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள Seychelles ல் உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த டேங்கர் கப்பல் தற்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பல் ரஷ்யாவின் ப்ரிமோர்ஸ்கில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினருக்கு வரும்போதுதான் ஹவுதி படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதி படை, அந்தக் கப்பலை மோசமாக தாக்கியுள்ளதாக ஏமனில் உள்ள ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கப்பல் எவ்வளவு சேதமாகியுள்ளது என்றும், கப்பலிலிருந்த குழுவினரக்கு என்ன ஆனது? போன்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
ஹவுதி படை தொடர்ந்து இந்தத் தாக்குதலை நடத்திவருவதால், வணிகக் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றி செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் செலவு அதிகரிப்பதால், சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் கப்பல்களை மட்டுமே குறிவைத்து தாக்கினார்கள். இடையில் இந்தத் தாக்குதல் சிறிது காலம் நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் இப்போது தொடங்கியுள்ளது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேதனையளிக்கிறது.
இந்தத் தாக்குதலில் இருந்துத் தப்பிக்க பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா ஒரு விமான தாங்கி கப்பலை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்புகளை ஓரளவு உறுதி செய்ய முடியும். ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை தங்களது தாக்குதல் தொடரும் என்பதை ஹவுதி படை திட்டவட்டமாகக் கூறிவிட்டது.