

இந்தியாவின் 77வது குடியரசு தின விழா , வரும் ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் இந்தியாவில் வளர்ச்சியையும் , கலாச்சார பெருமையையும் , ஆயுதப்படை வலிமையும் உலகிற்கு உணர்த்த நடத்தப்படுகின்றன. நாட்டின் ராணுவ வலிமையை உள்நாட்டு மக்களுக்கும் , சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் ஆயுதப் படைகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இந்த விழாவில் இந்தியாவின் முப்படைகளான தரைப்படை , கடற்படை , விமானப்படை ஆகியவற்றின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களும் நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்புகளில் போர் விமானங்களின் சாகசங்கள் வானில் நிகழ்த்தப்படும். விமானப் படை சாகசங்கள் காண்பவரின் கண்களுக்கு விருந்தளிக்கும் . ரஃபேல், சுகோய்-30 MKI போன்ற அதி நவீன போர் விமானங்களுடன் , இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தின் சாகசங்களும் நடைபெறும்.
இந்த தருணத்தில் பறக்கும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு யுக்தியை டெல்லி அரசு கடை பிடித்து வருகிறது. விமானப்படை ஒத்திகை செய்யும் நேரங்களிலும் , சாகச நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களிலும் கோழி இறைச்சியை வீசும் பணியினை செயல்படுத்தி வருகின்றனர்.
கோழி இறைச்சி வீசப்படுவது எதற்கு?
சாகசங்களில் ஈடுபடும் விமானங்கள் குறைந்த உயரத்தில் பறக்கும் , அப்போது கழுகுகள் பருந்துகள் உள்பட சில பெரிய பறவைகள் , விமானத்தின் அருகில் செல்லும் போது அவற்றின் என்ஜினால் இழுக்கப்பட்டு(Bird Hit) அவற்றில் சிக்கிக் கொண்டு விடுகின்றன. இதனால் , உடனடி பழுது அல்லது பெரிய அபாயங்களில் போர் விமானங்கள் சிக்கிக் கொள்கின்றன. இது போன்ற விபத்துகளை தவிர்க்க பறவைகளை விமான பாதையில் இருந்து திசை திருப்பும் வகையில் , டெல்லி அரசு 1,275 கிலோ அளவிற்கு எலும்பில்லாத கோழி இறைச்சியை வாங்கி வீச உள்ளது.
இதற்காக முறையாக டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த இறைச்சியை வாங்குவதற்காக சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. விமானங்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பின் செலவுடன் ஒப்பிடும்போது இந்த செலவு ஒரு விஷயமே அல்ல. கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்கு எருமை இறைச்சி பயன்படுத்தப்பட்டது. பறவைகளை கவரவும் , கையாளுவதற்கும் கோழி இறைச்சி எளிதாக இருக்கும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சிகளை 20-30 கிராம் அளவில் வெட்டி காற்றில் வீச உள்ளனர்.
பறவைகளைத் திசைதிருப்பும் திட்டம்:
டெல்லியின் செங்கோட்டை, ஜமா மசூதி, மண்டி ஹவுஸ் மற்றும் டெல்லி கேட் போன்ற பகுதிகள் உள்பட , கழுகுகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் 20 முக்கிய பகுதிகளில் , ஜனவரி 26 வரை இந்த இறைச்சி துண்டுகள் காற்றில் வீசப்படும். இந்த பகுதிகளில் உள்ள கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் இங்கேயே உணவு கிடைப்பதால் , அவை சில தினங்கள் இரையை தேடி அலையாமல் அங்கேயே இருக்கும். இதனால் விமான பாதையில் பறவைகளின் குறுக்கீடு இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.
விநியோக முறை:
ஒவ்வொரு நாளும் சுமார் 200 முதல் 400 கிலோ வரை இறைச்சி வீசப்படும். ஜனவரி 22 அன்று நடைபெறும் முழு ஒத்திகையின் போது 250 கிலோ இறைச்சி பயன்படுத்தப்படும். இந்த இறைச்சி துண்டுகள், வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வீசப்படும்.
தொழில்நுட்ப பாதுகாப்பு:
பறவைகளைத் திசைதிருப்ப இறைச்சி வீசுவது பழைய நடைமுறையாக இருக்கிறது. தற்போது இந்திய விமானப்படை 'Bird Deterrent System' என்கிற பறவையை விரட்டும் ஒலி அமைப்புகள் மற்றும் லேசர் கருவிகளையும் பயன்படுத்துகிறது. ஆனாலும், பாரம்பரிய முறையையும் அதிக பாதுகாப்பு வேண்டி பயன்படுத்துகின்றனர்.