இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எரிசக்தியை சேமிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேசிய அளவில் எரிசக்தியை சேமிக்கும் திட்டத்துக்கும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் தேவையை குறைக்கும் திட்டத்துக்கும் பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து கடைகள், பெரு வணிக வளாகங்கள் இனி இரவு 8.30 மணிக்கே மூடப்பட்டு விடும். திருமண மண்டபங்களில் இனி இரவு 10 மணிக்கு மேல் அலங்கார விளக்குகளை எரியவிடக்கூடாது என்றும் விழாக்களை 10 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறும் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் 60 பில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சில கடுமையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து ஒளிரும் விளக்குகள் தயாரிப்பை நிறுத்தவும், ஜூலை முதல் தரமற்ற, மின்சாரம் அதிகம் செலவாகும் மின்விசிறிகளை தயாரிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 22 பில்லியன் ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறியுள்ளது.
மேலும் எரிவாயு மூலம் செயல்படும் கூம்பு வடிவிலான கெய்ஸர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அரசு இதன் மூலம் 92 பில்லியன் ரூபாய் சேமிக்க முடியும் என்கிறது. சாலையில் ஒரு விளைக்கை விட்டு மற்றொன்றை பயன்படுத்துவதன் மூலம் 4 பில்லியன் ரூபாய் சேமிக்க முடியும் என்கிறது அரசு.
அரசு கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எரிசக்தி பயன்பாட்டை குறைக்க வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. அரசு துறை அலுவலகங்களில் 30 சதவீத எரிசக்தியை சேமிப்பதன் மூலம் 62 பில்லியன் ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இவையெல்லாவற்றையும்விட அமைச்சரவைக் கூட்டத்தை ஒளிரும் விளக்குகள் வெளிச்சத்தில் நடத்தாமல் சூரிய ஒளியுடன் நடத்தியதுதான் சிறப்பு அம்சம்.