திருப்பதி லட்டின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா?

Thirupathi laddu
Thirupathi laddu
Published on

தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்களின் இதயத்தை கொள்ளை கொள்ளும் திருப்பதி லட்டு, தனது 300 ஆண்டு கால பாரம்பரியத்துடன் இன்றும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் முக்கியமான பிரசாதமாக விளங்குகிறது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் இந்த லட்டு, சமீபத்தில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். இந்த பதிவில் திருப்பதியில் லெட்டின் தயாரிப்பு செலவு குறித்த சில உண்மைகளைப் பார்க்கலாம்.

திருப்பதி லட்டின் வரலாறு:

விஷ்ணு அவதாரமான வெங்கடேஷ்வரனுக்கு அளிக்கப்படும் முக்கியமான நெய் வேத்தியமாக லட்டு விளங்குகிறது. 1715 ஆம் ஆண்டு முதல் திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் 1920 ஆம் ஆண்டு முதல் லட்டிற்கு காப்புரிமை பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

திருப்பதியில் மூன்று விதமான லட்டுகள் கிடைக்கின்றன. கோவிலுக்குள் 40 கிராம் அளவில் பிரசாதமாகவும், விற்பனைக் கூடங்களில் 175 கிராம் அளவில் பக்தர்களுக்காகவும், சில சமயங்களில் 750 கிராம் அளவிலும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் நாம் சாப்பிடும் லட்டுவின் எடை 175 கிராம் ஆகும். இதன் விலை 50 ரூபாய். 750 கிராம் லட்டுவின் விலை 200 ரூபாய் ஆகும்.

திருப்பதி லட்டின் தயாரிப்பு செலவு:

திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு காலத்தில் ஒரு கிலோ நெய்யை 320 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்ததாரர் தற்போது பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் ஒரு கிலோ நெய்யை 475 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் முந்திரி, சர்க்கரை, ஏலக்காய் போன்ற பிற பொருட்களின் செலவும் சேர்க்கப்படும் போது, ஒரு லட்டின் தயாரிப்பு செலவு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும். தோராயமாக, ஒரு 50 ரூபாய் லட்டின் தயாரிப்பு செலவு 40 ரூபாய் என சொல்லப்படுகிறது. 

தினமும் 3.5 லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு, திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது. இந்த பிரம்மாண்டமான வருவாய், கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பிற சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

திருப்பதி லட்டு வெறும் இனிப்புப் பொருள் மட்டுமல்ல. இது ஆன்மிக நம்பிக்கை மற்றும் பக்தியுடன் இணைக்கப்பட்ட ஒரு புனித பிரசாதமாகும். ஏழுமலையானுக்கு நெய் வேத்தியமாக அளிக்கப்படும் இந்த லட்டை பக்தர்கள் பெரும் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 
Thirupathi laddu

தற்போது எழுந்த குற்றச்சாட்டு அதன் புனிதத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்தும் வகையில், தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், லட்டின் தரத்தை மேம்படுத்தவும், அதன் தயாரிப்பு முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையை பின்பற்றவும் வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com