
இன்றைய மருத்துவ உலகில் நம்மில் பலரும் வலி நிவாரணிக்காக பல மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக மருந்துகளின் காலாவதி தேதி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். காலாவதியான மருந்து, மாத்திரைகளைப் பலரும் குப்பைத் தொட்டியில் வீசி விடுகின்றனர். இதனால் மற்ற உயிர்களுக்குத் தான் ஆபத்து விளைகிறது. ஆகையால் இதனைத் தவிர்க்க காலாவதியான மருந்து பொருட்களை எப்படி அழிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை சி.டி.எஸ்.சி.ஓ. (Central Drugs Standard Control Organization) எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தினால் பல்வேறு பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். அதோடு அதனை அப்புறப்படுத்துவதாக நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுவது தவறான செயலாகும். இந்நிலையில் பொதுவாக மக்கள் பயன்படுத்தும் 17 வகையான மருந்துகளை தண்ணீர் ஊற்றி கழிப்பறையில் வீசி விடுங்கள் என சி.டி.எஸ்.சி.ஓ. அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
சளி, காய்ச்சல், வலிநிவாரணி மற்றும் பதற்றம் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் ‘டேபென்டாடோல், டிரமடால், ஆக்ஸிகோடோன், டயாஸிபாம் மற்றும் பென்டானில்’ உள்ளிட்ட 17 வகையான மருந்துகளை இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது சி.டி.எஸ்.சி.ஒ. அமைப்பு. மருந்துகளைப் பயன்படுத்தாத நிலையில், அவற்றின் காலாவதி தேதி முடிந்து விட்டால் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது தான் அனைவருக்குமே நல்லது.
காலாவதியான மருந்துகளை குப்பைத் தொட்டியில் வீசினால், அவை குப்பை அள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் அல்லது குழந்தைகளின் கைகளில் கிடைக்க அதிக வாய்ப்புண்டு. இதுதவிர கால்நடைகள் பலவும் சாலைகளில் சுற்றித் திரிவதால், இந்த மருந்துகளை அவை சாப்பிடவும் வாய்ப்புள்ளது. இதனால் அனைவருக்குமே ஆபத்து நிச்சயம். அதோடு காலாவதியான மருந்துகள் திருட்டுத்தனமாக கள்ளச் சந்தையில் மறு விற்பனை செய்யப்படும் அபாயமும் உண்டு.
ஆகையால் தான் காலாவதியான மருந்துகளை உடைத்து விடாமல், அப்படியே கழிவறையில் போட்டு தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்துமாறு சி.டி.எஸ்.சி.ஒ. அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.