

ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டண ரசீதை (EB BILL) பார்த்ததும் பலருக்கும் ஷாக் அடிப்பது தமிழ்நாட்டில் இயல்பான ஒன்றுதான். ஒவ்வொரு அரசும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மின்சார கட்டணத்தை, ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வருகின்றன. அடிக்கடி மின்சார கட்டணங்கள் மாறுவதால் பொதுமக்களும் கட்டண முறைகளை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமமும் உள்ளது.
பொதுவாக ஒரு வீட்டில் மின்சார நுகர்வு குறைவாக இருந்தும் கட்டணம் அதிகமாக வந்தால்,அதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு.
1.மீட்டர் கோளாறு
சில நேரங்களில் மின்சார மீட்டரில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அது , இயல்புக்கு மாறாக ஓடத் தொடங்கும். அப்படி இருந்தாலும் பில் அதிகமாக வரும். அதனால் , மீட்டரில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் மின்சார வாரிய ஊழியர்களிடம் தெரிவித்து சரிசெய்ய வேண்டும்.
2. ரீடிங் குளறுபடி
ஒரு சில நேரங்களில் மின்வாரிய ஊழியர் யூனிட்களைக் தவறாகக் கணக்கிட்டால் கூட பில் தொகை உயர வாய்ப்புள்ளது. அதனால் , யூனிட்களை சரியாக குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.
3. மின்கசிவு (Electric leakage)
உங்கள் வீட்டில் உள்ள வயர்கள் மிகவும் பழையதாகிப் போனாலும் , நறுக்கி ஒட்டப்பட்டு இருந்தாலும் , இணைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் லூசாக இருந்தாலும், மின் கசிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மின் கசிவின் போது தேவையற்ற முறையில் மின்சாரம் விரயம் ஆவதால் அதற்கான பயன்பாடும் மீட்டரில் ஓடும்.
4. பழைய கால மின்சார உபகரணங்கள்
பழைய கால மின்சார பொருட்கள், மின்சாரத்தினை அதிக பயன்படுத்தும் தன்மை கொண்டவை. பழைய பல்புகள் , ஃபேன்கள் , ஏசி , பிரிட்ஜ் , டிவி , மோட்டார் , வாஷிங் மெஷின் ஆகியவை அதிக மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. புதிய மின்சார பொருட்கள் அனைத்தும் மின்சார உபயோகத்தை பெருமளவில் குறைக்கக் கூடியவை. கிட்டதட்ட 60% மின்சாரத்தை இவை சேமிக்கும்.
5. ஸ்லாப்முறை மாற்றம் (Tariff Change)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) கட்டண முறையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. குறைவான மின்சார உபயோகத்திற்கு கட்டணம் குறைவாகவும், அதன் யூனிட்டுகள் குறிப்பிட்ட அளவில் அதிகரித்தால், அதற்கு தகுந்தார் போல் கட்டணமும் யூனிட்டுகளுக்கு அதிகரிக்கிறது. யூனிட்களின் உபயோகத்திற்கு தகுந்தார் போல் ஸ்லாப் ரேட் முறை மாறுகிறது.
6. ASD கட்டணம்
திடீரென்று உங்களது ஈபி பில்லில் தொகை அதிகமாக இருந்தால் , அதில் கூடுதல் காப்பு வைப்பு தொகை ASD (Additional Security Deposit) சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்யுங்கள். மின்சார வாரிய விதிகளின்படி நுகர்வோர்களின் மின்சார பயன்பாட்டிற்கு தகுந்தவாறு ஆண்டுக்கு ஒருமுறை இந்த வைப்புத் தொகை கட்டணத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது.
7. பேண்டம் லோட் (Phantom Load)
சில மின்சார சாதனங்கள் மெயின் சுவிட்ச் அணைக்கப்படாமல் ரிமோட்டில் மட்டும் அணைக்கப்பட்டிருந்தால், அதனுள் மின்சாரம் பயன்பாட்டில் தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் இதை அறிவதில்லை. டிவி, ஏசி , ஓவன் போன்றவற்றை அணைக்கும் பொழுது அதன் மெயின் சுவிட்சையும் அணைப்பது அவசியம். இல்லாவிட்டால் அதற்கான மின்சார பயன்பாடு குறையாது. மறைமுகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் இந்த முறைக்கு பேண்டம் லோடு என்று பெயர்.
தேவையற்ற நேரங்களில் மின்சார பொருட்களை அனைத்து வைத்து மின்சார கட்டணத்தை குறைக்கலாம்.
EB பில்லில் தவறுகளை கண்டறிந்தால்?.
உங்களது பில்லில் தவறு இருப்பதை கண்டறிந்தால், உடனடியாக மின்சார வாரிய பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்யலாம்.