

நீண்ட காலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளைத் தானியங்கி முறையில் துண்டிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் - டான்செட்கோ (TANGEDCO) நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி (Automated)மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி, அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
அதாவது இனிமேல் ஆறு மாதங்களுக்கும் மேலாக மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் நுகர்வோருக்கு இனி காகித முறையில் (Physical Notice) அறிவிப்பு வழங்கப்படாது. அதற்கு பதிலாக மின்சாரத்தை துண்டிக்கும் எஸ்.எம்.எஸ். (SMS) அடிப்படையிலான தானியங்கி அமைப்பை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1 முதல் குறைந்த மின்னழுத்தப் பிரிவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை, அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்குப் பொருந்தும்.
கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, இணைப்பு துண்டிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். இந்த அறிவிப்பு வந்த பின்னரும் 90 நாட்களுக்குள் நுகர்வோர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினாலோ அல்லது சேவையை மீண்டும் புதுப்பிக்கத் தவறினாலோ, அந்த மின் கணக்கை தமிழ்நாடு மின்சார வாரியம் நிரந்தரமாக ரத்து செய்து விடும்.
தற்போது வீட்டிற்கு மீட்டர் கணக்கெடுத்ததில் இருந்து 20 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், அதற்குள் செலுத்த தவறினால் சேவை துண்டிக்கப்படுகிறது.
தற்போதியை புதிய உத்தரவின்படி, நிலுவையிலுள்ள கணக்குகளை நிரந்தரமாக முடிக்கப் பொறியாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகள் மற்றும் மின்வாரிப் பொறியாளர்களுக்கு கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஒரு மின் கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு முன், உடன்படிக்கை ரத்து அறிவிப்புகள் நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டுபோய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய நடைமுறையான எஸ்.எம்.எஸ் மூலம் மட்டும் அறிவிப்பு அனுப்பி இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கும் இந்த தானியங்கி நடைமுறை குறித்து நுகர்வோர் நல ஆர்வலர்களும், ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டண அவகாசம் முடிந்த 7 நாட்களில் மின் இணைப்பைத் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது நேரடியாக களத்தில் துண்டிக்கப்படுமா? அல்லது பதிவேட்டில் மட்டும் துண்டிக்கப்படுமா? என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை என சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேசமயம், மின்சாரம் நேரில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அதை அறியாமல் பயன்படுத்தும் பட்சத்தில், அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற அதிகாரி நீலகண்ட பிள்ளை, இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் எந்த விதிகளின் கீழ் வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதுடன், வைப்புத்தொகை திரும்ப பெற இன்னமும் மனுக்களை நேரடியாகத் தர வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள், 2022ல் திருத்தப்பட்ட விதிகளின்படியே இது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைப்புத்தொகை திரும்பப்பெறும் நடைமுறையும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.