

ஹரியானா மாநிலத்தில் ஒரு விஜபி நம்பர் பிளேட் ஒன்று ₹1.17 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு , இந்திய வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளது. உலகம் முழுக்க சொகுசு கார் வாங்குவது மட்டும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலல்ல , அதற்கு பேன்சி நம்பரை வாங்குவதும் ஒருவரின் உயர் தகுதியை நிர்ணயிப்பதாக உள்ளது. ஒருவர் செல்வாக்குமிக்க மனிதர் என்றாலே, அவரது கார் எண்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது சமூகத்தில் உள்ள எழுதப்படாத நியதியாக உள்ளது.
பல ஆண்டுகளாக, ஃபேன்சி எண்கள் மீதான மோகம், இந்தியா முழுவதும் பரவி வருகிறது. தங்களது அதிர்ஷ்ட எண்கள் , தங்களின் பிறந்த நாள் , அல்லது பிடித்தமான குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் , காதலியின் பிறந்த தினம் , அதிர்ஷ்ட தினம் , ஜோசியர் குறிப்பிடும் எண்கள் , ஒரே மாதிரியான பேன்சி எண்கள் உதாரணத்திற்கு 1, 1111, 2222 இது போன்று உடனே நினைவுக்கு வரும் , ஒரே வரிசைக் கொண்ட எண்கள் விஐபி கார் எண்களாக நீண்ட காலமாக இருக்கிறது. 5555 , 7777, 9999 போன்ற எண்கள் வாகனங்களில் இருந்தாலே , அந்த காரில் பயணிப்பவர் செல்வாக்கு மிகுந்த நபர் என்று பல நாடுகளில் உணரப் படுகிறது. சமூக அந்தஸ்தையும் இது உறுதிப்படுத்துகிறது.
இது போன்ற காரணங்களால் அரசாங்கம் விஐபி நம்பர்களுக்கு தனி ஒரு விலையை வைத்துள்ளது. குறிப்பிட்ட நம்பர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டி அந்த எண்களை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் ஃபேன்சி எண்களுக்கான ஏலம் ஆன்லைனில் நடக்கிறது. இந்த ஏலம் fancy.parivahan.gov.in என்ற அரசாங்க வலைத்தளத்தின் மூலம் நடைபெறுகிறது.
இந்த வார ஏலத்தின் போது ' HR-88-B-8888 'என்ற எண்ணுக்கு அதிகபட்சமாக 45 விண்ணப்பங்கள் வந்தன. அதனால் அடிப்படை விலை ₹50,000 என நிர்ணயிக்கப்பட்டது. HR-88 என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் மாவட்டத்தின் , குண்ட்லி போக்குவரத்து அலுவலகத்திலிருந்து (RTO) வந்த எண்ணைக் குறிக்கிறது. இந்த எண்ணிற்கு ஏற்பட்ட கடுமையான போட்டியின் காரணமாக புதன் கிழமை மதியமே அதன் ஏலத் தொகை சாதனைத் தொகையான ₹88 லட்சத்தை தாண்டியது.
அன்று மாலை 5 மணிக்கு ஏலம் நிறைவடைந்த போது சுதிர்குமார் என்ற கோடீஸ்வரர் HR88-B-8888 என்ற பதிவு எண்ணை ரூ.1.17 கோடிக்கு ஏலம் எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்தியாவிலேயே அதிக விலை உயர்ந்த நம்பர் பிளேட்டாக இது இருக்கிறது.
இந்த விஐபி நம்பர் எண் தொடர்ச்சியாக 8 ஆக வருவதால் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது , இதில் இடையில் B கூட எட்டாம் எண்ணை ஒத்து இருக்கிறது. வாட்ஸ் இந்தியாவில் இந்த எண்கள் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுவாதால் அதற்கு அதிக டிமாண்ட் உள்ளது. அதே வேளையில் 8 வரிசை எண்கள் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை , இங்கு அதிர்ஷடமற்ற எண்ணாக இது பார்க்கப்படுவதால் , அதிக விலை இதற்கு கொடுப்பதில்லை.
இந்த ஏலத்திற்கு அடுத்த படியாக ,ஏப்ரல் 2025 இல் கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது 4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காருக்கு KL-07-DG-0007 என்ற எண்ணை ₹ 45.99 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் எண்ணான '0007' அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. கடந்த வாரம் ஹரியானாவில் HR22-W-2222 என்ற எண் ₹37.91 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆகஸ்ட் 2025 இல் சண்டிகரில் CH01-DA 0001என்ற பதிவு எண் ₹36.43 லட்சம் ஏலம் போனது. இதெல்லாம் அதிக விலைக்கு விற்கப்பட்ட கார்களின் பதிவு எண்கள்