Actor Black pandi
Actor Black pandi

Interview: "எனக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாமா?" - பிளாக் பாண்டி!

Published on

“சார், சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவிக்கு பிரசவ வலி. மருத்துவமனைக்கு போய்கிட்டு இருக்கேன். அந்த சமயத்தில் என் போனுக்கு ஒரு லிங்க் வருது. அதை தெரியாதனமா என் மனைவி கிளிக் பண்ண ஓடிபி நம்பர் கேட்டது. வீட்டுக்காரம்மாவும் அந்த நம்பரை போட்டு விட என் அக்கவுண்ட்டிலிருந்து இருபத்திஐந்தாயிரம் ரூபாய் போயிட்டுச்சு. ஹாஸ்பிடலில் சேர்க்க பணம் இல்லை. நண்பனிடம் கடன் வாங்கி மருத்துவமனையில் சேர்த்தேன். வங்கியில் புகார் தந்தும் இதுவரை இந்த பணம் வரவில்லை. தப்பு எங்க மேல தான். இதே மாதிரி ஒரு விஷயம் தமிழ்நாட்டிலின் ஒரு அரசியல் வாதிக்கும் நடந்திருக்கு. அவருடைய சில லட்சங்கள் புகார் தந்த மறுநாளே அவருடைய அக்கவுண்டுக்கு வந்திடுச்சு. இந்த நாட்டில் அரசியல் வாத்திக்கு ஒரு நியாயம், என்னை போன்ற சாமானியனுக்கு ஒரு நியாமா?" -

கோபத்துடன் கேட்கிறார் நடிகர் ப்ளாக் பாண்டி.

மனதில் உள்ளதை நம்மிடம் வெளிப்படையாக பேசும் பிளாக் பாண்டி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமா, டிவி தொடர் என தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது 'நிர்வாகம் பொறுப்பல்ல' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு நடுவே நமது கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் இங்கே...

Q

இத்தனை ஆண்டுகால சினிமா பயணம் எப்படி இருக்கு?

A

எங்கள் குடும்பம் மதுரையில் வசித்த நாடக நடிகர்கள் குடும்பம். என் தாத்தா சொக்கலிங்கம் பெரிய நாடக நடிகர். நான் மூன்றாம் தலைமுறை நடிகன். நாங்கள் சென்னைக்கு 1995 வந்துட்டோம். அப்போது எனக்கு ஒன்பது வயது. என் பதிமூன்று வயதில் மறைந்த டைரக்டர் வி சேகர் இயக்கிய 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' படத்தில் வடிவேலு பையனாக என்னை அறிமுகம் செய்தார். அதன் பிறகு பாலுமஹேந்திராவின் கதை நேரம், ரேடான் டிவியின் தொடர்கள், கனா காணும் காலங்கள், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த அங்காடித் தெரு உட்பட 120 படங்கள் நடித்துவிட்டேன். இப்படி சினிமா பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Q

இப்போது நடித்து வரும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தில் உங்க கேரக்டர் என்ன?

A

இன்றைய நாளில் இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் வரும் பாலியியல் மோசடியால் பாதிக்கப்படுகிறார்கள். நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்படம் இந்த மோசடியை பற்றி பேசுகிறது. இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் ஒரு நடிகன் என்பதை தாண்டி, இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்து இருப்பதாக நினைக்கிறேன். இதில் நடித்துள்ள ஆதவன் என் நண்பரும் கூட. இதுவும் நான் நிர்வாகம் பொறுப்பல்ல படத்தில் நடிக்க முக்கிய காரணம்.

Q

நீங்கள் பல படங்களில் நடிதாலும், கனா காணும் காலங்கள் பிளாக் பண்டி என்று இன்று வரை மக்கள் சொல்கிறார்கள்? இதை எப்படி உணர்கிறீர்கள்?

A

என் ஒரிஜினல் பெயர் லிங்கேஸ்வரன். கனா காணும் காலங்கள் தொடரில் என் பெயர் பாண்டி. அதன் பிறகுதான் என்னை பிளாக் பாண்டி என்று தமிழ்நாட்டு மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பாண்டி என்ற பெயர் தந்த தொடரை எப்படி மறக்க முடியும். இந்த தொடரில் நடித்த சக நடிகர் நடிகைகளில் சிலர் இன்னும் சினிமாவில் முயற்சி செய்து நடித்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வேறு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் போது இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Q

கனா காணும் காலங்கள், அங்காடித் தெரு, என பல படங்களில் பள்ளி மாணவனாக நடித்துளீர்கள்... இப்படி நடிக்கும் சமயங்களில் நீங்கள் பள்ளி படிப்பை தாண்ட வில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

A

இல்லாமல் இருக்குமா? குடும்ப வறுமை காரணமாக என்னால் படிக்கமுடியவில்லை. நீ படிக்காவிட்டாலும் பரவாயில்லை உன் தங்கையை படிக்கவை என்று என் அப்பா சொன்னார். அதனால் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்து என் தங்கையை டிகிரி வரை படிக்க வைத்தேன். என்னால் படிக்க முடியாமல் போனது போல் வேறு யாரும் இருக்க கூடாது என்பதற்காக என்னால் முடிந்த அளவு பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்கிறேன். அப்போது முடியாமல் போன படிப்பை, இப்போது தொடர்கிறேன். தற்போது பத்தாவது தேர்வு எழுதி சில பேப்பர் பாஸ் செய்துள்ளேன். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற சுப்ஜெக்ட்டும் பாஸ் செய்து பத்தாவது பாஸ் செய்து விடுவேன். இந்த வயதிலும் படிக்க வாய்ப்பு தந்த தமிழக அரசுக்கு நன்றி.

இதையும் படியுங்கள்:
Interview: பிளாக் மேஜிக் செய்யும் காட்டு மனிதனாக... - காந்தாரா சம்பத் ராம் ஓபன் டாக்!
Actor Black pandi
Q

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதால் கேட்கிறேன்... இப்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள SIR பற்றி உங்கள் கருத்து என்ன?

A

வரவேற்கிறேன். உயிரோடு இல்லாதவர்கள், போலி வாக்காளர்களை அடையாளம் காணுதல் போன்ற விசயங்களை செய்வதால் இந்த சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்பதை மாற்றி கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று படிவத்தில் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Interview: "மைலாஞ்சி... மாறுபட்ட காதல் திரைப்படம்" - அஜயன் பாலா!
Actor Black pandi
Q

சினிமா தாண்டி உங்களின் ஆர்வம் என்ன?

A

அய்யா அப்துல் கலாம் சொன்னது போன்று 'உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்', என்பதை மனதில் கொண்டு மனிதம் பேசு, உதவும் மனிதம் என்ற அமைப்பை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். 'மனிதம் பேசு' என்ற பெயரில் மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை தொடங்கி உள்ளேன். நான் வெற்றி பெரும் போது இந்த சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதால் இதை செய்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com