

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,கடந்த ஒரு மாதமாக பல்வேறு முக்கிய கோயில்களில் அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகிறார். திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட போது, சிறப்பு தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில் அனைத்து கோயில் நிர்வாகத்துக்கும் அறநிலையத் துறை சார்பில் சுற்றரிக்க்கை அனுப்பியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் கோயில் வளாகங்களில் இயங்கும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தூய்மையான இறைவனுக்கு பூஜைக்கு பயன்படுத்தும் தரமான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். அரசிடம் அனுமதி பெறாத எந்த பொருட்களையும் விற்க அனுமதி கிடையாது.
கோயில் கடைகளில் பூஜைப் பொருட்களின் விலைப் பட்டியலை பக்தர்கள் எளிதில் அறியும் வண்ணம் காட்சிப்படுத்துவது கட்டாயம் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிர்ணயம் செய்யப்பட்ட விலையை தாண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சில முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அனைத்துக் கோயில் நிர்வாகங்களுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அனைத்து கோயில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜைப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது.
பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும். தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் துணிப்பைகள். மூங்கில் கூடைகள், வலிய காகிதப் பைகள் மட்டுமே திருக்கோயில் வளாகத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.
திருக்கோயிலுக்கு செல்லும் / வெளியேறும் வழிகள் மற்றும் பூஜை பொருள் விற்பனை கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது.
திருக்கோயில் கடைகளுக்கு அருகில் உள்ள திருக்கோயில் சார்ந்த இடங்களை குப்பைகளின்றி தூய்மையாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் பராமரிக்க வேண்டும்.
திருக்கோயில் நிர்வாகம் இது தொடர்பாக அவ்வப்போது கடையை ஆய்வு செய்யலாம். திருக்கோயில் நிர்வாகம் கேட்கும் விவரங்களை பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டால் திருக்கோயில் நிர்வாகம் பூஜை பொருட்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.
அதிக விலை வசூலித்தல், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தல், விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் செயற்படும் பூஜை பொருள் விற்பனை கடைகளின் விற்பனை உரிமத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யலாம்.
இந்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர்கள், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.