ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா விண்வெளிப் பயணமான ஜி1 (G1) சோதனைப் பயணம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பயணத்தில், பாதி மனித உருவம் கொண்ட வியோமித்ரா (Vyommitra) என்ற ரோபோ அனுப்பப்படவுள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய விமானப்படை குழுத் தலைவர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்ற முதல் இந்தியர் ஆவார். சுக்லா, ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.
"ஜி1 ஆளில்லா விண்வெளிப் பயணம், இந்த ஆண்டு இறுதியில், டிசம்பரில் நடைபெறும். இதில், பாதி மனித உருவம் கொண்ட வியோமித்ரா பறக்கும்" என்று கூறிய நாராயணன், ஆகஸ்ட் 15, 2018 அன்று ககன்யான் திட்டத்தை அறிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
இஸ்ரோ கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது என்று தெரிவித்த நாராயணன், "முழு இஸ்ரோ திட்டமும் 20,000 ஊழியர்கள், 450 தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் 300 கல்வித்துறை கூட்டாளர்களின் கூட்டு முயற்சி. இன்று, ககன்யான் வீரர்கள் எங்கள் திட்டங்களில் எங்களுடன் கைகோர்த்து இணைந்துள்ளனர்." என்றார்.
இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "தொலை மருத்துவம், தொலைதூரக் கல்வி, தொலைக்காட்சி ஒளிபரப்பு, மற்றும் 8,600 ரயில்கள், 21,000 கப்பல்களை நிகழ்நேரத்தில் இணைப்பது போன்ற திட்டங்கள் உள்ளன." என்றார்.
மேலும், இஸ்ரோவின் சாதனைகளைப் பட்டியலிட்ட நாராயணன், "இஸ்ரோ பேரிடர் எச்சரிக்கை துறையில் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. ஐ.நா.வின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் 13 இலக்குகளுக்கு இஸ்ரோ ஆதரவு அளிக்கிறது" என்று கூறினார்.
இந்த ஆண்டு ஆதித்யா எல்1 சூரிய திட்டத்தில் இருந்து 13 டெராபிட் தரவுகளை வெளியிட்டோம். செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட சூரிய சுற்றுப்பாதையின் படங்கள் "மிக அற்புதமான சாதனை" என்று அவர் பாராட்டினார். கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். சோதனைகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகின்றன.
ஜூலை 30 அன்று ஏவப்பட்ட நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது, அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன. நிசார் என்பது உலகின் மிக விலையுயர்ந்த செயற்கைக்கோள் ஆகும், இது இந்தியாவின் ஜிஎஸ்எல்வி (GSLV) ராக்கெட் மூலம் ஏவப்பட்டு, சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ இதுவரை 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அமெரிக்காவின் 6,500 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவ உள்ளதாகவும் நாராயணன் கூறினார்.