சிட்ரஸ் பழங்களில், எலுமிச்சை, ஆரஞ்சு பற்றிதான் வழக்கமாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், புத்தரின் கை (Buddha's Hand) என்றழைப்படும் ஒரு சிட்ரஸ் பழத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோமா?
புத்தரின் கை சிட்ரஸ் பழம் என்றால் என்ன?
'சிட்ரஸ் மெடிக்கா வார். சார்கோடாக்டைலிஸ்' என்பது இதன் தாவரவியல் பெயர். கிரேக்க மொழியில் 'சார்கோஸ்' என்றால் தசைப்பற்று என்றும், 'டாக்டைலோஸ்' என்றால் விரல் என்றும் பொருள். இதன் பெயருக்கேற்ப, இந்த பழம் நீண்ட விரல்களைப் போன்ற பல பிரிவுகளைக் கொண்டது. ‘புத்தர் கை’ என்ற பெயர் சீன, ஜப்பானிய, கொரிய மற்றும் வியட்நாம் மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
இதில் உள்ள விரல்கள் போன்ற அமைப்பு சில சமயங்களில் பிரார்த்தனை செய்யும் கைகளைப் போல மூடிய நிலையிலும், சில நேரங்களில் ஆக்டோபஸின் கால்களைப் போல திறந்த நிலையிலும் காணப்படும்.
புத்தர் கை சிட்ரஸ் பழத்தின் தனிச்சிறப்பு:
இந்த அதிசயப் பழத்தின் உள்ளே சாறு, சதை அல்லது விதைகள் இருக்காது. இதன் வெளிப்பகுதி, அதாவது தோல், மிகவும் நறுமணம் நிறைந்தது. பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில், பளபளப்பாக இருக்கும். இதன் வாசனை எலுமிச்சை பூவின் வாசனையைப் போன்றது. இதன் கசப்பான வெள்ளை நிறப் பகுதி (pith) நீக்கப்பட்டு, வெளிப்புறத் தோலின் நறுமணமிக்கப் பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு புத்தர் கைப் பழத்தை அறையில் வைத்தால், பல மாதங்களுக்கு அந்த அறையை நறுமணத்தால் நிரப்புமாம்.
மற்ற சிட்ரஸ் பழங்களைப் போலவே, புத்தர் கை பழங்களும் மிதமான அல்லது வெப்பமான தட்பவெப்பநிலை கொண்ட பகுதிகளில் வளர்கின்றன. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் வளரும் இடங்களில், இந்த அதிசயப் பழமும் வளரும். இது பொதுவாக, குளிர்காலத்தில் விளைந்து, வசந்த காலம் வரை சந்தைகளில் கிடைக்கும்.
எப்படிப் பயன்படுத்துவது:
புத்தர் கை பழத்தின் விரல்களில் இருந்து ஒரு பகுதியை உடைத்து எடுத்து, அதன் மேல் உள்ள மஞ்சள் நிறத் தோலைத் துருவலாம். துருவிய இந்தத் தோலை கேக், சலாட் டிரெஸ்ஸிங், பானங்கள், மசாலாப் பொருட்கள் அல்லது எலுமிச்சைத் தோல் பயன்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளிலும் சேர்க்கலாம். இது மிகுந்த நறுமணம் கொண்டுள்ளதால், சிறிதளவு பயன்படுத்தினாலே போதும். இந்தத் தோலைக் கொண்டு இனிப்புகள் மற்றும் சுவையான உணவுகள் செய்யலாம். மேலும், இது வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் மூலமாகவும் உள்ளது. மேலும், இந்தப் பழத்தில் நிறைய பெக்டின் உள்ளது. அதனால், அதை பயன்படுத்தி ஜாம் தயாரிக்கலாம்.
புத்தர் கை பழத்தை அறை வெப்பநிலையில் ஒரு வாரம் வரையும், குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மாதம் வரையும் சேமித்து வைக்கலாம்.
இந்த அதிசயப் பழம், வெறும் பழம் மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார அடையாளமாகவும் உள்ளது. ஏனெனில் இது நீண்ட காலமாக பௌத்த கோவில்களில் காணிக்கையாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூடிய விரல்கள், பிரார்த்தனை செய்யும் ஒரு கரத்தைப் போலவே தோன்றுவதால், இது மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சீனாவில், இது நல்ல அதிர்ஷ்டத்துக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. ஜப்பானில், புத்தர் கை பழம் புத்தாண்டு பரிசாக நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது.