

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், சமீப காலமாக உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மனிதர்கள் பலமணி நேரம் செய்யும் வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் சில நிமிடங்களில் முடித்து விடுகிறது. ஏஐ வரவுக்குப் பிறகு பல முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்து நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
இதனால் ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே தங்கள் வேலையில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற சூழலில் பணியாளர்கள் தள்ளப்பட்டனர். ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தாலும், இதனை எதிர்த்தும் ஒரு சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இறுதிகட்ட தரத்தைப் பரிசோதிப்பதில் ஏஐ தொழில்நுட்பம் தோல்வி அடைந்ததாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான FORD தெரிவித்துள்ளது. மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை சில நிமிடங்களில் செய்து முடித்தாலும், ஏஐ தொழில்நுட்பத்திலும் சில குறைகள் இருப்பது தற்போது நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு நிறுவனம் இறுதி கட்ட தரப் பரிசோதனை செய்வதற்கு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவில் வேலை செய்யவில்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி 350 பொறியாளர்களை பணியில் அமர்த்தியது இந்நிறுவனம்.
மனிதர்கள் செய்யும் சில நுணுக்கமான வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் செய்யத் தவறி விடுகிறது. இதனால் தரமான கார்களை தயாரிக்க மனிதர்கள் மட்டும் தான் ஒரே வழி என ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி செயல்முறைகளை நவீன முறையில் மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. தரவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஏஐ செயல்படுவதால், மனிதர்கள் அளவுக்கு நுணுக்கமான வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
என்ஜின் சத்தம், காரின் ஃபினிஷிங் மற்றும் ஓட்டுநர் உணரும் நுணுக்கமான மாற்றங்களை கண்டறிவதில் மனிதர்களின் அனுபவம் அசாத்தியமானது. இதனை ஏஐ தொழில்நுட்பம் கண்டறிவது அவ்வளவு சுலபம் கிடையாது. மனிதர்களின் அனுபவத்தால் மட்டுமே இதனைக் கண்டறிய முடியும்.
ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் காரில், எதிராபாரமல் நடக்கும் தவறுகளைக் கண்டறிவதில் மனிதர்களின் தலையீடு அவசியம் தேவை என்பதை ஃபோர்டு நிறுவனம் உணர்ந்துள்ளது. அதனால்தான் ஏஐ தோல்வி அடைந்த உடனேயே 350 பொறியாளர்களை பணிக்கு எடுத்தது ஃபோர்டு நிறுவனம்.
இறுதி கட்ட தரப் பரிசோதனையில், ஒரு காரின் தரம் என்பது வெறும் எண்களால் மட்டுமே முடிவு செய்யப்படாது. மனிதர்கள் மட்டுமே கவனித்துக் கண்டறியக் கூடிய அதிநுட்பமான குறைகளை, ஏஐ சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பல நேரங்களில் கண்டறியத் தவறி விடுகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பக் கூடாது என்பதில் ஃபோர்டு நிறுவனம் தற்போது தெளிவாக இருக்கிறது. இதன் காரணமாக ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு உதவியாளராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி மனிதர்களின் தலையீடு அவசியம் என்பதால், ஏஐ கருவிகளை எப்படி இயக்குவது என மனிதர்களுக்கு சொல்லத் தர வேண்டும் என இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தரம் மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்வதில் மனிதர்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. ஃபோர்டு நிறுவனம் போலவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மனிதர்களின் தேவையை விரைவில் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.