

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் தான், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட்போன்களிலும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
ஏஐ வரவால் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கோடிக்கணக்கான பணத்தை முதலீடும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான டேட்டா சென்டர்களை அமைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் ஏஐ நிறுவனங்கள் இதுகுறித்த உண்மைத்தன்மையை வெளிப்படையாக கூற மறுக்கின்றன. தற்போது இதனை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார் ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசு. ஏஐ நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து உண்மையை வெளிப்படையாக கூற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசு கூறுகையில், “ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க அதிகப்படியான நிலம், நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும். ஏஐ டேட்டா சென்டர்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து இந்நிறுவனங்கள் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டிய நேரமிது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை தாங்க முடியாத எளிய மற்றும் ஏழை நாடுகளின் மீது திணிக்கக் கூடாது. ஏஐ தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும், வளங்கள் பயன்பாட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும் உலகளவிலான விழிப்புணர்வு தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக தற்போது ஐநா குரல் கொடுத்துள்ளது. மேலும் உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளும் இந்த விளைவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம் பல துறைகளில் நேரத்தை மிச்சப்படுத்தி, வெகு விரைவாக வேலையை முடித்துக் கொடுக்கிறது. இதனால் மனிதப் பயன்பாடு தேவையில்லாத ஒன்றாக மாறி வருகிறது. இருப்பினும் ஏஐ வளர்ச்சியைக் காட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சியை விடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலே தேவை.
AI ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கங்கள்:
மின்சார பற்றாக்குறை:
ஏஐ மாதிரிகளை இயக்கவும், உருவாக்கவும் அதிகளவிலான மின்சாரம் தேவை. இதனால் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், கார்பன் உமிழ்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிலப் பற்றாக்குறை:
ஏஐ டேட்டா சென்டர்களை உலகெங்கிலும் அமைக்க அதிகப்படியான நிலம் தேவை. இதனால் எளிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை:
ஏஐ டேட்டா சென்டர்களில் உள்ள கணினிகள் மற்றும் சர்வர்கள் தொடர்ச்சியாக இயங்கும்போது, அதிக அளவில் சூடாகிவிடும். இதனை குளிர்விக்க கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதனால் உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டும் பார்க்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் முறையான வழிகாட்டுதல்களை ஏஐ நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். அதோடு ஏஐ தொழில்நுட்பத்தால் சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை ஏஐ நிறுவனங்கள் அறிக்கையாக வெளியிட வேண்டும்.