

நவீன மயமான இன்றைய காலகட்டத்திலும், மனித நேயம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை ஒரு சில சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து விடுகின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒரு கைதியை, கேரள மக்கள் ஒன்றிணைந்து காப்பாற்றி இருப்பது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் சவுதி அரேபியாவில் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவரை கவனித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அந்த சிறுவன் திடீரென தற்செயலாக இறந்து விட்டார். இருப்பினும் தற்செயலாக நிகழ்ந்த மரணத்திற்கு அப்துல் ரஹீம் தான் காரணம் என அச்சிறுவனின் உறவினர்கள் சவுதி அரேபியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்துல் ரஹீமிற்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.34 கோடியை அவர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
குடும்ப சூழல் காரணமாகவே அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்தார். ஆனால் வேலைக்கு வந்து இடத்தில், ரூ.34 கோடியை செலுத்தினால் தான் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் தவித்து வந்த அப்துல் ரஹீமுக்கு, அவரது சொந்த மாநில மக்கள் உதவி செய்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.
அப்துல் ரஹீமின் உறவினர்கள் கேரள மக்களிடம் உதவி கேட்கவே, அம்மாநில மக்கள் ஒன்றிணைந்து ரூ.34 கோடி பணத்தை திரட்டினர். இந்தப் பணத்தை சவுதி அரேபியா நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு, அப்துல் ரஹீமை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி விட்டனர்.
கிட்டத்தட்ட மரணத்தின் வாசலுக்கே சென்று விட்ட அப்துல் ரஹீமுக்கே, நாம் இதிலிருந்து தப்பிக்க முடியுமா என்பதில் நம்பிக்கை இருந்திருக்காது. ஆனால் கேரள மக்கள் ஒன்றிணைந்து இதனை சாத்தியப்படுத்தி விட்டனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓட்டுநர் வேலைக்காக சவுதிக்கு சென்ற அப்துல் ரஹீமுக்கு, உரிமையாளரின் மாற்றுத்திறனாளி மகனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் கிடைத்தது. 2006 டிசம்பர் 24ஆம் தேதி அன்று அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்.
இந்நிலையில் தனது மகனின் மரணத்திற்கு ஓட்டுனர் தான் காரணம் என அவர் அப்துல் ரஹீம் மீது குற்றம் சாட்டினார். இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கவே, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் பணத்தை வழங்க வேண்டியது அவசியம். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 15 மில்லியன் சவுதி ரியால் அதாவது இந்திய மதிப்பில் 34.35 கோடி ரூபாய் வேண்டுமென அவர்கள் கேட்டனர். மேலும் இதற்கு 2024 ஏப்ரல் 20-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.
அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள், மலையாள அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்கப்பட்டது. எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக அதாவது ரூ.47 கோடி வரை பணம் திரட்டப்பட்டது. காலக்கெடுவிற்குள் பணத்தை சவுதி நீதிமன்றத்தில் செலுத்திய பிறகு, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் தண்டனை காலமாக 20 ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தாக வேண்டியிருந்தது.
இதன்படி கடந்த மே 20-ம் தேதியுடன் 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். பிறகு இந்தியத் தூதரகம் மூலம் நேற்று முன்தினம் (மே 28) பக்ரீத் பண்டிகையின் போது அப்துல் ரஹீம் கேரளாவிற்கு வந்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைப் பார்த்த அவரது தாயார் பாத்திமா, “அனைத்து மக்களின் கூட்டுப் பிரார்த்தனையும், மனிதநேயமும் தான் என் மகனை மீட்டுக் கொடுத்துள்ளது” என நன்றியைத் தெரிவித்தார்.
சக மனிதனுக்கு எதிராபாராமல் நாம் செய்யும் உதவிகள் தான் மனித நேயம் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம். அப்படியான ஒரு செயலில் ஒரு மாநிலமே ஈடுபட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஒற்றுமையே பலம்’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ போன்ற பழமொழிகள் ஒற்றுமையின் சிறப்பை எடுத்துரைக்கும் வேளையில், கேரளாவில் அரங்கேறிய இந்த சம்பவம், ஒற்றுமையுடன் மனிதநேயத்தையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.